அன்றாட வாழ்க்கையில் கணிதம் இன்றி எதுவும் இல்லை என்பதை தெளிவாகக் காட்டும் நுால். கணிதத்தின் துணையால் அறிவியல் ஆய்வுகளில் பெரும் திருப்பங்களே ஏற்பட்டுள்ளன. கணிதத்தின் கோட்பாடுகளோ, அதில் அமைந்துள்ள சூத்திரங்களோ வாழ்வில் அவ்வளவாக பயன் படாது. அதன் அழகை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து உழைப்பவர்களுக்கு மட்டும் தான் கணிதம் வசப்படும்.
இதை, இங்கிலாந்து கணித மேதை ஹார்டியின் புத்தகத்தை மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது அருமை. அலீல்களும், அல்ஜீப்ராவும் பகுதியில் கணித ஆராய்ச்சிக்காக ஹார்டியின் அர்ப்பணிப்பு, அவரது வாழ்வு சம்பவங்களை சுவாரசியமாக குறிப்பிட்டுள்ளார்.
கச்சிதமான காலணி நாடா, உறுதியின் உத்தரவாதம், சமமாக பிரிக்கும் சவால் என, 15 தலைப்புகளில் கணித நுட்பங்களை, பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு விளக்கி புரிய வைக்கிறது. கணித ஆர்வலர்களுக்கு இந்நுால் வரப்பிரசாதம்.
–
வியாஸ்