ராகாஸ், 12/293 ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை-14. (பக்கம்: 200, விலை: ரூ.75.)
* தமிழகத்தின் தொன்மையான `கூத்து' வகைகள் ஆய்ந்து காணத் தக்கவை; அறிந்து போற்றத்தக்கவை.
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில், கம்பளத்து நாயக்கர்கள் பாடிக் கொண்டே ஆடும் ராமாயண ஒயில் நாடகம் இங்கே கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கையில் பல வண்ணத் துணிகளை ஆட்டிக் கொண்டே, விசில் எழுப்பி, கால் கைகளை ஒரே மாதிரி அசைத்து சலங்கை கட்டி ஆடும் ஒயிலாட்டம் ஆண்கள் மட்டுமே ஆடும் அருமை ஆட்டமாகும்.
ராமன், சீதை, சுக்ரீவன் போன்ற பாத்திரங்கள் வந்து பாடிக் கொண்டு ஆடுகின்றனர். அனுமன் வேடமிட்டவர் அருள் வந்து உண்மையிலேயே ஆடுகிறார். அவரிடம் மக்கள் திருமண் பிரசாதம் பெறுகின்றனர். பிறகு, அவர் ஆவேசம் அடங்க முகக்கண்ணாடியை அவர் முன் காட்டுகின்றனர். `நாடு செழிக்கணும், நல்ல மழை பெய்யணும், ஊரு செழிக்கணும், ஊராரெல்லாம் வாழணும்' என்ற சூடதீப ஆராதனையுடன் ஒயிலாட்டம் முடிவடைகிறது. இதைப் படிக்கும் போது, நமது மக்களின் பக்தியும், பொதுநோக்கும் நம்மை நெகிழ வைக்கின்றன.
திரைப்படம், தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்தால் ஒயில் நாடகக் குழுக்கள் பாதிக்கப்பட்டு சிதைந்து போய் விட் டன. இக்குழுத் தலைவர் 78 வயது கண்ணுசாமித் தேவர் குரல் போன நிலையிலும், நம்பிக்கை குறையாமல் இக்கலைக்கு உயிர் தந்து வருகிறார்.
`நடிப்பவர்க்கும் பார்ப்பவர்க்கும் நட்பு இருக்கணும் நல்ல தமிழ்ச் சொல்லாலே அன்பை வளர்க்கணும்' என்று கோமாளியின் ஒயிலாட்டப் பாடல் சொல்வது போல் இந்த ஒயிலாட்டக் கலையை மரணத்துயிலில் இருந்து மீட்கும் போராட்ட முயற்சியே இந்த நூல்.