வெளியீடு: ரிஷபம் பதிப்பகம், இரண்டாம் தளம், எண்:31/45, இராணி அண்ணா நகர், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை78. (பக்கம்: 128, விலை: ரூ.50.)
தனம்மாள் எனக் கூறும் போதே, வீணை தனம்மாள் என்று தான் பொருள்! சரஸ்வதியின் அவதாரமாகப் போற்றப்பட்ட அவரது பெயருடன் வீணை இணைந்ததில் வியப்பு ஏதுமில்லை!
இசை உலகில் இமயத்தையொத்த சாதனையாளரான தனம்மாள், 1867ம் ஆண்டு சென்னை ஜார்ஜ்டவுன் பகுதியில் பிறந்து, இசை ஒன்றையே அறிந்தவராகவும், இசைக்கெனவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டும், 71 ஆண்டு காலம் பாரதத்தின் ஒப்பற்ற இசை மேதையாகத் திகழ்ந்தவர்.
தனக்கென்று உருவாக்கிய குறு வீணையின் மெல்லிய கம்பிகளின் நாதம் கடூரமோ, பிசிறோ அற்றது.
நாமனைவரும் அசட்டைப்படுத்தும் சுண்டு விரல், தனம்மாள் வீணையில் பக்க சாரணியை மீட்டிச் சுருதியைக் கூட்டி விட, நம்மை அது நாத வலையில் ஜீவஸ்வரங்களுடன் பிணைத்து விடுமாம். எங்கும் நிசப்தம் நிலவிட, அழுத குழந்தையும் வாயை மூடி விடுமாம்!
இப்படி இசை மணம் கமழ்கிறது. ஆனால், அமிர்த கலசத்தில் ஒரு துளி அல்ல, பல துளிகள் நச்சையும் தெளித்தளித்துள்ளார் நூலாசிரியர்.
தனம்மாள் தேவதாசி மரபிபனர், மேலும் பெண் கலைஞர் என்பதினாலும் சமூக ஒதுக்கம் செய்யப்பட்டார் எனும் நூலாசிரியரின் வாதம் ஏற்பதற்கில்லை! அவரே தொகுத்தளித்துள்ள கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களில், தனம்மாளுடன், பழம் பெரும் இசை மேதைகள், சாகித்ய கர்த்தாக்கள், ரசிகர்கள் அனைவரும் (பெரும்பாலும் சமூ கத்தின் முன்னணி வகுப்பினர்) உற்சாகமாக இணைந்திருப்பதும் (பக்.60, 83) அத்தகைய மேல்தட்டு ரசிகர்களின் புகழாரங்களும் (பக்.115-122) அவரது கூற்றினை பொய்ப்பிக்கின்றது. நுண்கலைகளுக்கும், கலைஞர்களுக்கும், ஜாதிமத பேதம் ஏது? என்ற அடிப்படையில் உண்மையை 20 ஆண்டு காலமாகத் தமிழிசை ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருபவர் அறியாதது விந்தையே!
தமிழகத்தில், சோழர் காலத்திற்குப் பின்னர் வடமொழி மயமாக்கம் அரங்கேறியதாக எழுதிய தகவல்களும் அப்படியே!
மேலும் மூத்த தொல்பொருள் அறிஞரான இரா.நாகசாமியையும், அவர் வழங்கியுள்ள வரலாற்று நூலையும் கொச்சைப்படுத்தி, காழ்ப்புணர்ச்சியுடன் எழுதியிருப்பது (பக்.47) கண்டனத்துக்குரியதாகும்.
இசை மாமேதைகளின் வாழ்க்கைச் சரிதத்தை ஒருவர் எழுத முற்ப-டும்போது நடுநிலைப் பண்பாளராக நிகழ்வுகளை எழுத்தில் கொணர்வது அவசியம். ஏனெனில், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என எழுதப்படும் வரலாற்றுப் புதினம் அல்லவே இந்நூல்!
மென்மையான மனித உணர்வுகள் இதனால் தூண்டி விடப்படும் வாய்ப்புகள் இருப்பதால், பதிப்பாளர், வெளியீட்டாளர்களுக்கும் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்ற வேண்டிய கடமையும், கட்டாயமும் உள்ளது.