விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சமையல் கலையில் வல்லவர்கள் என்று புராண காலத்தில், நளனும் பீமனும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். நளபாகம் என்றே உன்னதமான சமையல் கலைக்குப் பெயர். மனிதனின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்பனவற்றில் முதலிடத்தில் இருப்பது உணவுதான். வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் _ என்பது பாரதியின் கூற்று.
அதையும்கூட, ஏதோ ஏனோதானோவென்று உப்புச் சப்பில்லாமல் சமைத்துக் கொடுத்தால், உண்பவருக்கு உணவின் மீதான ஈடுபாடு இல்லாமல் போய்விடும். அதன் பிறகு உண்பதற்கு நாக்கும் மனமும் ஒத்துழைக்காமல், உணவை மறுத்துவிடும் போக்கும் ஏற்பட்டுவிடும். எனவே நாவுக்கு ருசியாகச் சமைப்பது முக்கியம்.
இன்றைக்கு பல குடும்பங்களில் எழுகின்ற சிறு சிறு தகராறுகளும்கூட சாப்பாட்டு மேஜையில் வைத்தே எழுவதாகச் சொல்கிறார்கள். உணவின் ருசியில் மனம் சொக்கிப்போகும்போது, இதுபோன்ற சண்டைகள் எழாது என்பது உளவியல் நிபுணர்களின் கருத்து.
சமையல் கலை, நம் நாட்டில் வட இந்தியப் பாணி, தென்னிந்தியப் பாணி என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிந்திருக்கிறது. இந்த நூல் அந்த இரண்டு பாணி சமையலையும் சொல்வதாக அமைந்துள்ளது. அன்றாடம் சமைக்கும் சமையலிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு, இன்னும் சுவையாக, விதவிதமாக எப்படி சமைப்பது என்பதற்கான வழிகள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.
இன்று பெரும்பாலான வட இந்தியப் பாணி உணவு வகைகளை தென்னிந்தியப் பெண்மணிகள், தங்கள் உணவு லிஸ்டில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புதுவிதமான வடஇந்திய உணவு வகைகளைச் செய்து பார்க்க வசதியாக, இந்த நூலில் பல்வேறு இனிப்பு வகைகள், பாயச வகைகள், கார வகைகள் தரப்பட்டுள்ளன. மேலும் தென்னிந்திய உணவு வகைகள் பலவும் செய்முறை விளக்கங்களோடு தரப்பட்டுள்ளன. இந்த நூலில் கூறப்பட்டுள்ள சமையல் வகைகளை ஜோராக செய்து ஜமாய்க்கலாம்.