விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் அளிக்கும் யோசனை வழக்கமாக நாம் கேட்டறிந்ததுதான். ஆனால், அறுசுவை அரசு நடராஜனிடம் போய்விட்டால் போதும்... வயிற்றுக்கும் செவிக்குமாக சேர்த்து அவரே அளித்துவிடுவார் பல்சுவை விருந்து!
கைமணம் போலவே பேச்சிலும் அத்தனை சுவாரஸ்யம்... செரிமானம்!
சமையல் குறிப்புத் தொடர் ஒன்றை எழுதும்படிக் கேட்டுத்தான் விகடன் நிருபர் அவரைச் சந்தித்தார். பேச்சோடு பேச்சாக, பூணூல் கல்யாணம் தொடங்கி அறுபதாம் கல்யாணம் வரை தான் கேடரிங் பொறுப்பேற்ற சுப விசேஷங்களில் சந்தித்த அனுபவங்களை அவர் சொல்லச் சொல்ல... சமையல் குறிப்புத் தொடர் தானாகவே ஒரு மினி வாழ்க்கைக் குறிப்புத் தொடராக மலர்ந்தது.
அழுகிற குழந்தைக்குக் கல்யாண மண்டபத்திலேயே தூளி கட்டித் தாலாட்டியதில் தொடங்கி, தாலி கட்டும் நேரத்தில் முறைத்துக்கொண்டு போன சம்பந்தியின் மனதைக் குளிரவைத்து, கெட்டி மௌம் கொட்ட வைத்தது வரையில்... ஒரு சமையல் கலைஞரின் பாத்திரத்தைத் தாண்டி உரிமையோடு அவர் தலையிட்டுத் தீர்த்துவைத்த பிரச்னைகள் பற்றி விகடனில் வெளியானபோது... இன்னொரு வாஷிங்டனில் திருமணமாகவே அவற்றைப் படித்து ருசித்தார்கள் வாசகர்கள்.
சமையல் குறிப்புகள் எல்லாம் சம்பவ சுவாரஸ்யங்களுக்குப் பலம் சேர்க்கும் சைடு டிஷ்களாக மாறிப் போயின!
நடராஜன் தனது ஆரம்ப வாழ்வில் பட்ட அவமானங்களையும், அனுபவித்த துன்பங்களையும் வெளியில் சொல்லத் தயங்கியதேயில்லை. மாறாக, கரண்டியை நம்பினோர் கைவிடப்படார் என்ற புதுமொழிக்கு அடையாளமாக எத்தனையோ சோதனைகளைத் தாண்டி வருவதற்கு இந்த நளபாகம் தனக்கு எப்படியெல்லாம் கை கொடுத்தது என்பதைச் சொல்வதில் அவருக்கு மிகுந்த பெருமை!
ருசிக்கும்போது இருக்கும் பிரமிப்பும் பிரமாண்டமும், அவர் தரும் சமையல் குறிப்புகளில் இருக்காது. யாரும் பளிச்செனப் புரிந்துகொண்டு, நறுக்கென சமைக்கிற வகையில் மிக எளிமையாகவே எடுத்துச் சொல்லியிருக்கிறார். தொடராக வந்தபோது விகடனில் இடம்பெற்ற சமையல் குறிப்புகளுக்கு மேலும் விவரம் சேர்த்து, இந்தப் புத்தகத்துக்காக அவற்றை ஸ்பெஷல் ரெஸிப்பிகளாக அளித்திருக்கிறார்.
தொடங்கட்டும் விருந்து _ உங்கள் செவிக்கும் வயிற்றுக்கும்!