விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
புகழ்பெற்ற வரலாற்று நிகழ்வுகளை படித்து அறிந்திருப்போம். அப்படி நாம் அறிந்த இடங்களுக்கு நேரில் செல்லும்போது ஏற்படுகிற உணர்வுகளும் பரவசங்களும் முழுவதும் எழுத்தில் வடிக்க இயலாத ஒன்று. ஏனெனில், பார்ப்பது வேறு, பரவசம் வேறு... ரசிப்பது வேறு, லயிப்பது வேறு.
பார்த்தல், கேட்டல், உணர்தல், நுகர்தல், நினைத்தல் போன்ற ஏதாவது ஒரு செயலில் ஈடுபடும்போது இதில் ஒன்றில் மட்டும்தான் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்.
ஆனால், ஓர் இடத்தில் நிகழ்ந்த சம்பவங்களை மனதில் நினைத்து, அந்த இடத்துக்கே நேரில் சென்று பார்த்து அறியும்போது ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிக்கும். அது என்றென்றும் நினைவிலிருக்கும். அதனால்தான் பயண அனுபவங்கள் அனைவருக்கும் நெகிழ்வூட்டுவதாக அமைகிறது.
இந்தவகையில்தான் குருக்ஷேத்ர பூமிக்கே நம்மை அழைத்துச் சென்று, மகாபாரதப் போரின் திருப்புமுனைக் காட்சிகள் நடைபெற்ற இடங்களை மெய்யுருக தரிசிக்க வைக்கிறார் நூலாசிரியர் அருண் சரண்யா.
குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளையும், அதன் நெறிமுறைகளையும், பாண்டவ _ கௌரவர்களின் படைகளையும், தேவர்களின் ஆயுதங்களைப் பாதுகாத்த ததீசி முனிவரையும் நேரில் காண்பதுபோல் காட்சிப்படுத்திச் சொல்லியிருப்பது, இந்த நூலின் அடுத்தடுத்த பக்கங்களை விரைவாகப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
சிறந்த பயண நூலுக்கேற்ற தகவல்களையும், அற்புத ஆன்மிகப் பரவசத்தையும் ஒருசேர அளிக்கிறது இந்த நூல்.