விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
ஒரு காலத்தில் மக்களின் மனங்களில் வீரத்தையும், உத்வேகத்தையும் ஊட்டியவை நாடகங்கள். காரணம், நாடகக் கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடம் யதார்த்தத்தை எடுத்துச் சென்று, அவர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்க முடிந்தது. இப்போது வரலாற்று நாயகர்கள் பற்றிய நாடகங்கள் மங்கிப் போய், நகைச்சுவைக்கும் சமூகக் கருத்துகளுக்குமான களனாக நாடக மேடை மாறிப்போயுள்ளது.
இப்படி ஒரு சூழ்நிலை நிலவும்போது, துணிந்து ஒரு வரலாற்று நாயகனின் கதையைக் கையில் எடுத்து, அதை இன்றைய சமூகச் சூழ்நிலையோடு இணைத்து நாடக மேடையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் இந்த நாடக ஆசிரியர் விவேக் சங்கர். எளிய கதையம்சம்தான் என்றாலும், இந்த நாடகத்தைப் பார்த்த பல்லாயிரம் உள்ளங்களை விவேகானந்தரின்பால் இழுத்துச் சென்ற அதிசயத்தை நிகழ்த்தியது. அந்த நாடகமே இந்த நூலாக மாறியிருக்கிறது.
சினிமாவில் நடிக்கும் கதாநாயகன் ஒருவன், தன் புகழின் மீது இருந்த இறுமாப்பால், மற்றவரைத் துச்சமாக எண்ணுகிறான். இந்த நிலையில் அவனுடைய அகம்பாவத்தை நொறுக்குவதற்காக குறுக்கு வழியில் ஒரு தயாரிப்பாளரும் இயக்குனரும் அவனுக்கு சுவாமி விவேகானந்தரின் வேடத்தைப் போட்டு சினிமா தயாரிக்க முயல்கின்றனர். பலவிதப் போராட்டங்களுக்குப் பிறகு சுவாமி விவேகானந்தரின் கதையைக் கேட்கக் கேட்க அந்தக் கதாநாயகனுக்கு மனம் மாறுகிறது. புகழின் உச்சியில் சென்றபோதும் சுவாமி விவேகானந்தர் எப்படி அடக்கமாகவும் அமைதியாகவும் இருந்து சமூகப் பணி செய்தார் என்பதைக் கேட்டு உணர்ந்து, அவனும் மனதால் மாறிப்போகிறான்.
இந்த நாடகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இந்த மனமாற்றம் ஏற்படும். தனி நபரை விட இந்த சமூகம் பெரிது என்பதை உணர்ந்து, நம்மைச் சேர்ந்த இந்த சமுதாயத்துக்கு ஏதாவது நன்மை செய்ய மனத்தில் எண்ணம் உண்டாகும்.