விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் விளக்குகிறது. ஒவ்வொரு ஆழ்வார்களின் சரித்திரமும் தனித்தனியாகவும், அவர்கள் பாடிய பாசுரங்களில் சிலவற்றைப் பற்றிய விளக்கங்கள் அதைத் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளன.
ஆழ்வார்களை வேதம் தமிழ் செய்தவர்கள் என்பர். அப்படி, அவர்கள் எந்த வகையில் வேதக் கருத்துகளை தங்கள் பாசுரங்களில் தெரிவித்துள்ளனர் என்பதையும் இந்நூலில் அங்கங்கே தெரிவித்துள்ளார் நூலாசிரியர்.
ஆழ்வார்கள் தங்கள் பக்தியினால் அளக்க முடியாதவனான இறைவனையே கட்டிப்போட்டனர். இந்த அன்புக் கயிறை அறுத்துக்கொண்டு போகப் பிரியப்படாமல், இறைவன் அடங்கியிருந்தது நம்முடைய உள்ளத்தை உருகச் செய்கிறது.
ஆழ்வார் ஒருவர், எம்பிரானே உன்னுடைய பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொள் என்றால், இறைவன் ஆழ்வார்க்கு அடியவனாக இருந்து சுருட்டிக்கொண்டு அவர் பின்னே போவதும், பிறகு வேறொரு தருணத்தில் உன்னுடைய பைந்நாகப் பாயை விரித்துக்கொள் என்றால் மறுபேச்சின்றி அடிபணிவதும் சுவையாகவும் இருக்கிறது; ஆழ்ந்த சிந்தனையையும் தூண்டுகிறது.
ஆழ்வார்கள் இறைவனை ஒவ்வொரு அனுபவத்தில் ரசித்திருக்கின்றனர். இறைவனை குழந்தைப் பருவம், தளர்நடைப் பருவம், வளர்ந்த சிறுவனாக என்று தாயின் பாவத்தில் ரசித்த ஆழ்வார், ஒரு பெண்ணின் பாவனையிலும் இளைஞனாக ஆண்டவனை ரசித்திருக்கிறார். பாவனையில் ரசித்தனர் என்பதைவிட பாவித்தனர் என்பதே பொருத்தம். ஏனென்றால் ராமர் கதையைக் கேட்டுக்கொண்டே வந்த குலசேகர ஆழ்வார் அவனுக்குத் துணையாகப் போரிட யாருமில்லை என்னும்போது தன் தளபதியிடம் படையைக் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.
ஆழ்வார்கள் வாழ்க்கையில் நடந்த இதைப் போன்ற பல நிகழ்ச்சிகளைத் திரட்டி சுவையாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர் செங்கோட்டை ச்ரீராம். ஆழ்வார் பாசுரங்கள் சிலவற்றின் அர்த்தங்களை அதன் நயத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய நடையில் விளக்கியிருக்கிறார்.