விலைரூ.115
புத்தகங்கள்
மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை
விலைரூ.115
ஆசிரியர் : சாருகேசி.
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: இலக்கியம்
Rating
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை-2. (பக்கம்: 358)
மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை என்ற துணை தலைப்புடன் குர்சரண்தாஸ் எழுதியுள்ள இந்த புத்தகம், "இந்த நவீன யுகத்தில், மகாபாரதம் போன்ற பழங்காலப் படைப்புக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது என்ற கேள்வியின் பின்னணியில் ஒரு ஆய்வு மேற்கொள்கிறது.மகாபாரதக் காப்பியத்தின் மையக் கருத்தான "தர்மம் மற்ற மொழிகளில் நேரடி மொழி பெயர்ப்புக்குள் கொண்டு வர இயலாத கருத்து. கடமை, நன்மை, நீதி, சட்டம், பழக்கம் எல்லாம் அதன் (தர்மம்) தொடர்புடையவையே என்றாலும் "தர்மம் என்ற வார்த்தையின் பொருளை எட்டியதாகச் சொல்லிவிட முடியாது.
மகாபாரதம் இந்த அடிப்படைக் கொள்கையான தர்மத்தை விளக்க முற்படுகையில் மிகவும் சிரமப்படுகிறது என்பது குர்சரண் தாசின் அபிப்பிராயம். யுதிஷ்டிரனின் கொள்கை சார்ந்த அமைதி நிலையையும், துரியோதனனின் அநியாயமான போக்கையும் நிராகரித்துவிட்டு, யதார்த்தப் போக்கின் வழியே "தர்மம் அர்த்தப்படுத்தப்படுகிறது என்கிறார் நூலாசிரியர்.
அபிமன்யு சக்கரவியூகத்துள் நுழைந்த பின் வெளியேறத் தெரியாமல் தவித்தபோது கொல்லப்படுவதும், துரியோதனன் பீமனால் கொல்லப்பட்ட முறை, யுத்த தர்மத்திற்கு விரோதமான செயல் என்பதும், சிகண்டியின் பெண்தன்மையுள்ள தோற்றத்தைப் பார்த்த பிறகு போர்புரியாமல் நின்றபோது (தர்மத்திற்கு கட்டுப்பட்டு) பீஷ்மர் கொல்லப்படுவதும், கர்ணன், சேரில் புதையுண்ட தேர்ச்சக்கரத்தை நிமிர்த்த முற்படுகையில் அம்பு எய்திக் கொல்லப்படுவதும், கிருஷ்ணனின் சூழ்ச்சி, தந்திரம் சார்ந்ததாக அமைந்துள்ளது. யுத்த தர்மம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதர்மத்தை அழிக்க தர்மத்தை மீறலாம் என்ற வசதியான சலுகையைச் சுவைபட விவரிக்கிறது, மகாபாரம்.
குர்சரண்தாஸ், மகாபாரதக் கதாபாத்திரங்களின் இயல்பான குணசித்திரத்தை, விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஊன்றிக் கவனித்து மிகுந்த நிதானத்துடன் காப்பியத்தை ஆய்வு செய்கிறார். இருபத்தியோராவது நூற்றாண்டு மக்களின் சிந்தனைப் போக்கு சற்றே மாறுபட்டது. பழமையிலிருந்து விடுபட்டு வெளியே வந்து சிந்தித்து, புதிய சிந்தனைகளுக்கு மனக்கதவுகளைத் திறந்து வைக்கத் தயாராக இருக்கிறது என்று கருத்தும் நூலாசிரியரின் கவனத்திற்குரியது.மிகப் பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் மிக உயர்ந்த பதவியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு மகாபாரதத்தைப் படித்து விட்டு இந்த நூலை எழுதியுள்ள குர்சரண்தாஸ் ஆங்கிலத்தில் நிறைய நூல்களை எழுதியுள்ளார். சாருகேசியின் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பில், ஆற்றொழுக்குப் போன்ற உரைநடையில், விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் ஆங்கிலத்தில் வெளிவந்த போது ஏற்படுத்திய அதே அலைகளையும் ஏற்படுத்தும் என்று கூறலாம். படித்துப் பார்க்கவேண்டிய ஒரு சில மிக முக்கியமான புத்தகங்களில் இதையும் ஒன்றாக அவசியம் சேர்த்துக் கொள்ளலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!