எல்.கே. பப்ளிகேஷன், பழைய எண் 15/4, புதிய எண் 33/4, ராமநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை 600017. தொலைபேசி: 24361141.
தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் போற்றிய பத்திரிகா தர்மத்தை மூத்த பத்திரிகையாளர் விளக்கமாக எழுதிய படைப்பு இது. 1942ல் நடந்த ஆகஸ்டு புரட்சியில் பங்கேற்ற எக்ஸ்பிரஸ் ராமனாத் கோயங்காவும், அவருக்கு துணையாய் இருந்த சிவராமனும், "சீர்காழி சதி வழக்கில்' சிக்கியவர்கள் என்ற அறிமுகம் எவ்வளவு துணிச்சலானவர் பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பதைப் படம் பிடிக்கிறது. 23 மொழிகளை அறிந்தவர். அரசியல் தலைவர்களைச் சந்திக்காமல் தனியே ஒதுங்கி அதே நேரம் உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்தவர். அவசியமற்ற விளம்பரங்களைத் தவிர்த்தவர் என்ற கருத்துக்கள் அவர் பெருமையைக் காட்டுபவை.தினமணியில் தான் ஒரு சமயம் செய்திப்பிரிவில் தவறு செய்தபோது, தன்னை அழைத்து, "உன் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வேலை செய், அது போதும்' என்று கூறிய பாங்கு (பக்கம் 119) அவரது தொழில் பண்பாட்டைக் காட்டும் பகுதி, நெருக்கடி நிலைக்காலத்தில் "என்னால் இக் கொடுமையைச் சகிக்க முடியவில்லை...
(பக்.288) என்று கூறிய சுதந்திர வேட்கையாளர் பற்றிய பல தகவல்கள் நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.அதனால் தான், தினமணி நாளிதழில் இருந்து பணி விலகிய பின், ஆசிரியர் சொக்கலிங்கம், "ராஜீய ஞானமும், பொருளாதார ஞானமும் அவருக்கு தளபாடமான விஷயங்கள்' என்று கூறிய பகுதி சிவராமன் பெருமையைப் படம்பிடிக்கிறது. துவக்கத்தில் "அண்ணாவின் அறிவுரை' பற்றியும், அமைச்சர் அழகேசன் அன்பு பற்றியும் நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது, அவரது திறமைக்கு அளவுகோல்கள், அதனால் தான் அவர் "சுக்கிர நீதி' உட்பட பல நூல்களை எழுதியும், ஊதியம் பெறாமல் 25க்கும் மேற்பட்ட தொண்டுகளையும் செய்து வருகிறார் என்பதைப் பார்க்கும் வாசகர்கள் பிரமிப்பு அடைவர். அவர் எழுதிய படைப்பின் மீது மதிப்பும் நிச்சயம் அதிகரிக்க உதவிடும்.
869. "தொலைக்காட்சி உலகம்':நூலாசிரியர்: பவா சமத்துவன். வெளியீடு: புதுயுகம் செய்முறை செம்மையாக்கம், 72/40, ஓ.வி.எம்., தெரு, சேப்பாக்கம், சென்னை-5. பக்கம்: 554, விலை: ரூ.300.
உலகையே கட்டியாளத் துடித்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி உலகத்தின் செயல்பாடுகளின் அனைத்து விவரங்களையும் விவரிக்கும் நூல் இது. ஏறத்தாழ நாற்பது அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்நூலுக்கு பிரபல இயக்குனர்கள், கவிஞர்கள் முன்னுரை எழுதியிருப்பதில் இருந்து நூலின் சிறப்பு புரியும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பில் நீண்ட அனுபவம் வாய்ந்த நூலாசிரியர், தொலைக்காட்சியின் நிர்வாக அமைப்பு, தயாரிப்புச் செலவுகள், படப்பிடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவற்றின் தொழில்நுட்ப விவரங்கள், விளம்பர நுட்பங்கள் போன்றவற்றை விரிவாக விளக்கியுள்ளார். அவற்றைத் தமிழில் படைத்திருப்பது சிறப்பாகும். தவிரவும் தொலைக்காட்சிகளில் வரும் வசனங்கள் தமிழை அன்னியப்படுத்தி அமைத்திருப்பதையும், தமிழைக் கொலை செய்யும் விதத்தையும் சுட்டிக்காட்டியிருப்பது துணிச்சலானது. இத்துறையில் ஆழங்கால் பட்ட தன்மையை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இத்துறையில் நுழைய விரும்புவோருக்கு இந்நூல் சிறந்த உதவியாக அமையும். சின்னத்திரையை பற்றி பருந்து பார்வை பார்க்க விரும்புவோருக்கு இந்நூல் பயன்படும்.