கும்பகோணத்தில் பிறந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, டில்லியில் தமிழ்ப் பேராசிரியராக கல்லூரியில் பணிபுரிந்து, தமிழில் நிறைய எழுதி, புகழ்பெற்ற இ.பா. கட்டுரைகளின் தொகுப்பு. அவரே கூறியுள்ளது போல், வெங்காயத்திலிருந்து வெடி குண்டுவரை என, அனைத்து விதமான விஷயங்களையும் அலசி, ஆராய்ந்து, விமர்சித்து, பின்னிப்பெடலெடுத்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள். சுவை, சுவாரஸ்யம், காரசாரம், வம்பு, என, எல்லாம் அடக்கம். இந்த நூலில் செம்மொழி நாடகம் – மூலம் ஒரு குட்டு வைக்கிறார், அரசியல்வாதிகளுக்கு ஆங்கில நாவல் வாசித்து ‘ஆஹா ஓஹோ’ என, அலப்பறை செய்வோருக்கு, புக்கர் பரிசு பெற்ற ‘ஒயிட் டைகர்‘ என்ற நாவலை, கிழி கிழி என, கிழித்திருக்கிறார். ‘விடை தேடுவோம்’ என்ற கட்டுரையில், நாடக இலக்கியத்திற்கு சமஸ்கிருதம் தான் முன்னோடி என்று உறுதிபடக் கூறி நியாயப்படுத்தியுள்ளதை, தமிழர்கள் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும். பொதுவாகவே, நாடகம் பற்றி இ.பா. கூறியுள்ளவை அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. பயனுள்ள பல யோசனைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார். கலை, இலக்கியம், மொழி, சினிமா, அரசியல் என, எல்லாம் இந்தத் தொகுப்பில் அலசி, கரைத்து, துவைத்து, காயப் போடப்பட்டுள்ளது.
ஜனகன்