இன்று சந்தையில், மேலாண்மை குறித்து ஏராளமான புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால், இந்த நூல் மேலாண்மை பற்றி பேசினாலும், ஒரு வித்தியாசமான நூல். ஏனெனில் கிரிக்கெட்டுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கிறது இது! இரண்டிலுமே வெற்றி ஒன்றே பிரதானம். மேலாண்மையின் பல அம்சங்களான தலைமைப் பண்பு, ஒரே குழுவாகப் பணியாற்றல், நன்னெறிகளும் ஒழுக்கக் கோட்பாடுகளும், சமயோசிதமும், துணிவான முடிவும் எடுத்து அதைச் செயலாற்றும் முறை இவை யாவுமே இரண்டிலும் மிக முக்கியம்.
நிர்மா, ரிலையன்ஸ், ஹெவ்லட் பாக்கார்டு போன்ற கம்பெனிகள் மிகச் சாதாரண நிலையிலிருந்து பின் மகா வெற்றிகரமான கம்பெனிகளாய் எப்படி மாறின? அதுதான் அவற்றை நிறுவியவர்களின் தன்னம்பிக்கை, துணிச்சல் உழைப்பு. பெரும் வர்த்தக நிறுவனங்களின் மேலாண்மையையும், கிரிக்கெட் சம்பவங்களையும் கோர்த்து எழுதப்பட்டுள்ள மிகச் சுவையான நூல். மிக எளிமையான ஆங்கிலம். கிரிக்கெட் அபிமானிகள் மட்டுமின்றி அனைவரும் படிக்கலாம்.
கேசி