சப்த ரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவர், ‘பிரம்மாவின் புத்திரர். ஜோதிட ஞானத்தின் கரையற்ற கடல் போன்றவர்’ என, போற்றப்படுபவர். அவர், வடமொழியில் இயற்றிய இந்த நூல், மிக எளிமையாகவும், அருமையாகவும், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. ஒரு லக்னத்திற்கு, 108 வித பலன்கள். இப்படி, 12 லக்னங்களிலும், ஒன்பது கிரகங்கள் இருப்பதால் விளையும் பயன்கள் என, 1,296 வித பலன்களை, பிருகு முனிவர் இந்த நூலில் விவரித்துள்ளார். ஜோதிடம் கற்போருக்கு ஒரு தெளிவான வழிகாட்டி இது. அதேசமயம், இந்த பலன்களை, முடிந்த முடிவாகவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. உதாரணத்திற்கு, துலா லக்னத்திற்கு ஏழில் சனி நீச்சமாக இருந்து, அந்த வீட்டிற்குரிய செவ்வாய், மகரத்தில் உச்சமாகவோ, விருச்சிகத்தில் ஆட்சியாகவோ இருந்தால், அப்போது சனிக்கு நீச்ச பலனைச் சொல்ல முடியாது. நீச்ச பங்கம் ஏற்பட்டு, ராசியாக மாறிவிடும். எனவே, இந்த நூலை, ஓரளவு நல்ல வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம். நல்ல கட்டமைப்பில், நூலின் தயாரிப்பு வெகு தரமாக அமைந்திருக்கிறது.
கே.சி.,