சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றிய டாக்டர் கே.வி.ராமன், தென் மாநிலங்களில், தான் பங்கேற்ற, பல முக்கிய அகழ்வாய்வுகள் பற்றி, இந்த நூலில் விவரித்துள்ளார். தென் மாநிலங்களில் நடந்த அகழாய்வு தொடர்பாக, தொல்லியல் துறை மூலம், அவ்வப்போது ஆசிரியர் வெளியிட்ட ஆங்கில ஆய்வறிக்கைகள், 16 கட்டுரைகளாக, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, முதற்பதிப்பாக தற்போது வெளிவந்துள்ளது.
காவிரிப்பூம்பட்டினம், உறையூர், கேரளம், நெல்லை மாவட்டம் களக்குடி என்ற உக்கிரன்கோட்டை, அரிக்கமேடு, கரூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில், ஆசிரியர் நடத்திய அகழாய்வுகள் பற்றிய விவரங்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. திருவஞ்சைக்களத்தில் நடந்த அகழாய்வுகள் மூலம் அந்த இடம், கி.பி., ௮ம் நூற்றாண்டுக்கு பிந்தையது என தெரிய வருகிறது என்கிறார் ஆசிரியர்.
அதனால், ‘‘சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் சேரர் தலைநகர் வஞ்சி, திருவஞ்சைக்களமாக இருக்க முடியாது; ஆய்வறிஞர் இரா.இராகவையங்கார் குறிப்பிட்டது போல, கரூர் தான் வஞ்சி என்பதை அகழாய்வுகள் உறுதி செய்கின்றன,’’ என, கே.வி.இராமன் தெளிவாக குறிப்பிடுகிறார்.
வட ஆர்க்காடு மாவட்டத்தில், பையம்பள்ளி என்ற இடத்தில் கிடைத்த மட்பாண்ட ஓடுகள், கி.மு., 1400ம் ஆண்டை சேர்ந்தவை; சரித்திர நாவல்களில் இடம் பெறும் யவனர்கள், காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி இருந்ததை, வெள்ளையன் இருப்பு என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட, ரோமானிய நாணயமும், ரோமானிய மட்பாண்டங்களும் உறுதி செய்கின்றன என, பல முக்கியமான தகவல்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. உறையூர், கேரளா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி தகவல்கள், திருப்பரங்குன்றம் குகைக் கல்வெட்டுகள், செப்பேடுகள், பாண்டிய நாட்டில் காணப்பட்ட நடுகல் உள்ளிட்ட வீரக்கற்கள், பாண்டியர்களின் சமய நெறிமுறைகள், அரிக்கமேட்டு அகழ்வாய்வில் கிடைத்த சங்க கால சோழர் நாணயம், கரூரில் கிடைத்துள்ள பிராமி எழுத்துடன் கூடிய முத்திரை மோதிரம் என, அரிய தகவல்களை இப்புத்தகத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளார்.
வரலாற்றை நிரூபிக்க ஆதாரங்கள் முக்கியம்; அந்த வகையில், கே.வி.இராமனும், இந்த புத்தகமும் நமக்கு அவசியம்.
சிசு