ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ள கதைகளை அறிந்த பலரும், கிளைக் கதைகளை அறிந்திருக்க மாட்டார்கள். கிளைக் கதைகளையும் அவற்றில் பொதிந்துள்ள உட்கருத்துக்களையும், எளிய நடையில், தெளிவான முறையில், எல்லாருக்கும் புரியும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார்.
‘மன்னனா? துறவியா?’ என்ற கட்டுரையில் ஜனகர் – பஞ்சசிகர் தொடர்புடைய நிகழ்வுகள் புலனடக்கம், சத்தியத்தின் உயர்வு, அகந்தை, ஆணவம் துறத்தல் முதலானவற்றை வலியுறுத்துகின்றன. மனைவி கூறிய கருத்தை மதித்த ஜனகர், பிரம்ம ஞான தத்துவத்தை உணர்ந்து அரச வாழ்வையும், தவ வாழ்க்கையையும் ஒன்றாகக் கடைப்பிடித்து, சிறந்த ராஜரிஷியாக திகழ்ந்தார். ஆணவம் இல்லாமல் அடக்கத்தோடு வாழ்ந்து, பிரம்ம ஞானியாகத் திகழ்ந்த ஜனகர், நமக்கு வாழ்க்கை வழிகாட்டியாக திகழ்கிறார். வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய கருத்துகள், கதைகள் மூலம் வற்புறுத்தப் பெறுவதை உணரலாம். இந்த தொகுப்பில், 21 கதைகள் உள்ளன. படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் நல்ல கதைகளைக் கொண்டுள்ள பயனுள்ள சிறந்த நூல்.
பேரா.ம.நா.சந்தான கிருஷ்ணன்