காஞ்சிப் பெரியவர் ஆசியுரை, முருகன் பற்றிய கட்டுரையுடன், மலர் துவங்குகிறது. கர்நாடக இசை தொடர்பான டேப்புகள், ஆடியோக்களை சேகரிக்கும் கலை ஆர்வலர்கள் பற்றிய கட்டுரை நல்ல தொகுப்பு.
காளிதாசனின் மேக சந்தேசம், தமிழ் விடு தூது, பலபட்டடை சொக்கநாதப் பிள்ளை இயற்றிய கிள்ளை விடு தூது, கச்சியப்ப முனிவர் இயற்றிய கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது ஆகிய நான்கு தூது இலக்கியங்கள் பற்றிய ஆய்வு கட்டுரைகள் அருமை.
ரோமப் பேரரசன் மார்க்கஸ் அரேலியசின், ‘ஆத்ம சிந்தனை’ என்ற கட்டுரை, ராஜாஜி மொழிபெயர்ப்பில் வந்துள்ளது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், அவரை நினைவு கூரும் விதத்தில், சென்னை சங்கீத வித்வத் சபையின், 42வது மாநாட்டில், அவர் நிகழ்த்திய தலைமை உரை, முழுமையாக கொடுக்கப்பட்டு உள்ளது.
அச்சு பதிப்புலகத்திற்கு இணையாக வளர்ந்து வரும், மின்நூல்கள் பற்றிய கட்டுரை, காலத்தின் தேவையை காட்டுகிறது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் தயாராகும் மரச்சிற்பங்கள் பற்றிய கட்டுரையும், படங்களும் ரசனையை கூட்டுகின்றன. அசோகமித்திரன், விமலாதித்த மாமல்லன், ராஜேஷ்குமார் உள்ளிட்டோரின் சிறுகதைகள், இந்திரா பார்த்தசாரதி, பூபாலன் ஆகியோரின் நாடகம், நாடக விமர்சனம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
விகிர்தன்