வழக்கமாக பெரும்பாலான தீபாவளி மலர்கள், சான்றோர், துறவிகளின் ஆசியுடன் துவங்கும். தினகரன் தீபாவளி மலர், டெக்னாலஜி அப்டேட்டுடன் துவங்குகிறது. ரிச்சி தெருவில் கிடைக்கும், அதிநவீன எலக்ட்ரானிக் பொருட்கள் பற்றிய தொகுப்பு.
அதையடுத்து, சிவகாசி ஸ்ரீனிவாஸ் பைன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் கலை நயமிக்கம், ௪௦ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பகவத் கீதை புத்தகம் பற்றிய அறிமுகக் கட்டுரை.
வீயெஸ்வியின் எழுத்துக்களில், எம்.எஸ்., பற்றி சில துளிகள், பல்வேறு நாடுகளின் உணவு வகைகள் தயாரிப்பு பற்றிய கட்டுரை, திரைத்துறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து இளைய இயக்குனர்களின் பேட்டி, ரயில்வே குறித்த பெரும்பாலான செய்திகளை தொகுத்த, ௯௨ வயது வெங்கட்ராமனின் அனுபவம், பொதிகை மலையில் உள்ள பாண்டியன் கோட்டை பற்றிய ஆய்வு கட்டுரை போன்றவை சுவாரசியமானவை.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் வகை வகையான தோசைகள், சென்னை பிராட்வேயில், பிரிட்டிஷ் காலத்தில் துவங்கி தற்போது வரை நடக்கும் புறா சந்தை, கொள்ளிடம் ஆற்றின் மேலணை, கீழணை கட்டிய சர் ஆர்தர் காட்டன் பற்றிய கட்டுரை, இலங்கையில் உள்ள தியேட்டர்கள் பற்றிய கட்டுரை ஆகியவை நம்மை ஈர்க்கின்றன. வான்வெளியில் இருந்து உலகை படமெடுப்பதில் ஆர்வம் கொண்ட அமெரிக்கர் ராபர்ட் டி ஸ்டீபன்ஸ் எடுத்த, கழுகுப் பார்வையில் சென்னை புகைப்படத் தொகுப்பு கண்களுக்கு விருந்து. இவை தவிர, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பட்டுக்கோட்டை பிரபாகர், பாவண்ணன், கே.என்.சிவராமன் உள்ளிட்டோரின் சிறுகதைகள் என, பல்சுவை மலராய் மலர்ந்திருக்கிறது, தினகரன் தீபாவளி மலர்.
கிருஷ்ணபாலா