ஜெயகாந்தனை துரோணராக வரித்துக் கொண்ட ஜெகாதா (ஜெயகாந்தன் தாசன்) என்ற ஏகலைவன், வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி உச்சியைத் தொட்டிருக்கிறார். ஜெகாதாவின், 18 நீள் கதைகளைக் கொண்ட தொகுதி இது. ‘அவ்வளவு பெய்த மழையிலும் நிலவு நனையாமல் பளீரிடுவதைப் பார்த்தாள். ஒளியேற்றிய கற்கண்டுக் கட்டிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன’ என்பது போன்ற வர்ணனைகள் நம்மை, உற்சாகப்படுத்துகின்றன.
ராமேஸ்வரம் சங்கு குளித் தொழிலாளர் பிரச்னைகளைச் சித்தரிக்கும், ‘சமுத்திர குமாரர்கள்;’ கந்து வட்டிக்குக் கடன் வாங்கி அவதியுறும் அப்பாவிகளுக்கு நியாயம் கேட்கும், ‘கரையான் புற்றெடுக்க;’ குஷ்ட ரோகிகளுக்கு உதவும் ஒரு கருணை வள்ளலைத் தீட்டிக் காட்டும், ‘கருணைவயல்;’ ஜாதிக் கலவரத்தின் கொடுமையைச் சொல்லும், ‘ஒற்றுமை எனும் தாரக மந்திரம்;’ கிட்னி தானம் செய்யும் ஒரு மாமனிதனைச் சொல்லும், ‘கொடுப்பவன் கோபுரத்தில் அமர்வான்’ என, அனைத்துமே அருமையான நீள் கதைகள். சமூகத்தை நன்கு கற்றுத் தேர்ந்த அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தவை ஜெகாதாவின் எழுத்துக்கள் என்பது நிரூபணமாகிறது.
எஸ்.குரு