இந்தியாவுக்கு பின் விடுதலையடைந்த நாடுகளின் வளர்ச்சியை பட்டியலிட்டு, நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லையே என, தன் ஆதங்கத்தை, கல்வி, இலக்கியம், அரசியல், சமுதாயம் எனும் தலைப்புகளில் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர்.
தாய்மொழியாகிய சீன மொழியிலேயே பள்ளிக்கல்வி துவங்கி, பல்கலைக்கழக ஆராய்ச்சி கல்வி வரை நடத்தும் சீனா, உலக தரப்பட்டியலில் முன்னிடம் பெற்றிருக்கிறது. தாய்மொழியில் படித்தால், தரம் தாழ்ந்து விடும் என கூறும், தமிழக பல்கலைக்கழகங்கள், கண்டுபிடிப்பு சாதனை எதனையும் நிகழ்த்தவில்லை (பக். 26) என, சாடுகிறார். கடந்த, 1948ல் விடுதலை பெற்ற சீனா, தங்கள் நாட்டுக்கு ஏற்ற அரசியல் நெறிமுறை பொதுவுடைமையே என, முடிவு செய்தமையால், இன்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளனர்.
பல்வேறு பண்பாடுகளையும், மொழிகளையும் உடைய நாம், பிரிட்டனை அப்படியே காப்பியடித்து, அரசியல் அமைப்பு முறைகளையும், சட்ட நெறிமுறைகளையும் அமைத்துக் கொண்டதால், விடுதலை பெறுவதற்கு முன்பு இருந்தே அனுபவித்து வந்த அத்தனை பிரச்னைகளிலும், இன்றும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார் நூலாசிரியர். சிந்தனையை தூண்டும் நூல் இது. புலவர்.சு.மதியழகன்