முகப்பு » வரலாறு » பாண்டியர் வரலாறு

பாண்டியர் வரலாறு

விலைரூ.315

ஆசிரியர் : பேராசிரியர் மா.ராஜசேகர தங்கமணி

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கல்லூரி  அளவில் வரலாற்றுப் பாடம் கற்கும் மாணவர்களுக்கு, நன்கு அறிமுகமான நூல், இது. கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு,  முதல் பதிப்பாக வெளிவந்த நூல், தற்போது விகடன் பிரசுரம் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளிவந்து உள்ளது.
கடந்த, 1926ம் ஆண்டில், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் அணிந்துரையுடன், ஹரிஹரமையர் என்பவரால் எழுதி வெளியிடப்பட்ட நூல்,  ‘பாண்டிய ராஜவம்ச சரித்திரம்!’அந்த நூல் துவங்கி, பாண்டியர் வரலாறு குறித்து  பல்வேறு கால கட்டங்களில் வெளிவந்த நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும்  படித்து, ஒரு முழுமையான தொகுப்பு நூலாக இந்த நூலை ராசசேகர தங்கமணி எழுதிஉள்ளார்.
‘பாண்டி நாடு முத்துடைத்து’ என்ற பழமொழி தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்த, முத்துக்குளி துறைமுகமான, கொற்கையை அடுத்துள்ள ஏரல்  என்ற ஊரில் வழங்கிய நாட்டுப் பாடலையும் (தமிழக அரசு தொல்லியல் துறை வெளியீடான, ‘கல்வெட்டு’ காலாண்டு இதழில் வெளி வந்தது), ‘நாடோடி இலக்கியம்’ என்ற தலைப்பில் இந்த நூலில் இணைத்துள்ளார் நூலாசிரியர்.
கடந்த, 1969, 70ம் ஆண்டுகளில், தொல்லியல் துறை கொற்கையில் மேற்கொண்ட அகழாய்வு பற்றியும், அந்த  அகழாய்வில் கண்டறியப்பட்ட தடயங்கள் குறித்தும் விவாதித்துள்ளார்.
கி.மு., 5ம் நூற்றாண்டில், மதுரையில் பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற கருதுகோளின் அடிப்படையில், கி.மு., 5ம் நூற்றாண்டு துவங்கி, களப்பிரர் இடையீடு, கி.பி., 570 முதல், 966 முடிய ஆண்ட முற்காலப் பாண்டியர், பாண்டியர்கள் சோழர்களால் வீழ்ச்சியடைதல், கி.பி.,13ம் நூற்றாண்டில் மீண்டெழுதல், 14ம் நூற்றாண்டில் மதுரை சுல்தான்கள் ஆட்சி, பிறகு, 15ம் நூற்றாண்டு துவங்கி, 1754ம் ஆண்டு வரை, திருநெல்வேலி பகுதியில் பாண்டியர் ஆட்சி என்று நீளும் பாண்டிய மன்னர் வரலாற்றை, இலக்கியங்கள், கல்வெட்டுகள், அகழாய்வுத் தடயங்கள், பழங்காசுகள், வெளிநாட்டார் குறிப்புகள், இப்படி பல தரவுகளையும் பரிசீலித்து உரிய விவாதங்களுடன் கட்டமைத்துள்ளார்.
இருபது கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலவியல் சார்ந்த நிகழ்வான மெசோசாயிக் யுகத்தை, கி.மு., 5000க்குரிய தொல்லியல் சார்ந்த நிகழ்வான, ‘மெசோலித்திக்’ எனப்படும் குறுணிக் கற்கருவிக் காலத்துடன் இணைத்து, க.அப்பாத்துரையார் போன்றோர் தாமும் குழம்பி,
வரலாற்று மாணவர்களையும் குழப்பியதை (பக்.86) வெளிப்படுத்தி, தெளிவுபடுத்தும்  நூலாசிரியர், ‘செங்கோன் தரைச் செலவு’ என்ற போலி நூலைச் சங்க இலக்கியமாக  நம்பி, 96, 97ம் பக்கங்களில் மேற்கோள் காட்டியிருப்பது வியப்பளிக்கிறது.
இந்த நூலின்  பதிப்பு குறித்து தனி விமர்சனமே எழுதலாம். பக்கத்திற்குப் பக்கம், அச்சுப்  பிழைகள் மலிந்துள்ளன. ‘ஆரியர் –திராவிடர்’ என்பது, ‘ஆசிரியர் – திராவிடமர்’  என்றும் (பக்.63), ‘முல்லைக் கலி’ என்பது, ‘முல்லிகக்லி’ என்றும்  (பக்.87), ‘கிறித்து அப்தத்தின்’ என்பது, ‘குறித்து அப்பதத்தின்’ என்றும்  (பக்.98), ‘தென் தமிழ்க் கடவுள்’ என்பது, ‘கென் தமிக்கடவுள்’ என்றும்  (பக்.104) அச்சிடப்பட்டுள்ளன.
நூலில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்க சொற்றொடர்ப் பத்திகள் சில, பின் அட்டையில் அச்சிடப்பட்டுள்ளன. அதிலும் பிழை உள்ளது. ‘இராசு கம்பீர அஞ்சுகோட்டை நாடாழ்வான்’ என்பது, ‘இராச கம்பீரக் அச்சுக்கோட்டை நாடாழ்வான்’ என்று அச்சிடப்பட்டுள்ளது.
நூலின் முதல் பதிப்பு வெளிவந்த காலகட்டத்திலேயே, ஜம்பை என்ற ஊரில் கண்டறியப்பட்ட பிராமிக் கல்வெட்டின் மூலம், அசோகன் கல்வெட்டுகளில், சதியபுத்ரர் என்று குறிப்பிடப்பட்ட மன்னர்கள் அதியமான்களே என்பது நிறுவப்பட்டுவிட்டது. ஆனால், இந்த நூலின்  பக்., 171, அடிக்குறிப்பு 23ல், துளுநாடே அசோகன் கல்வெட்டுகளில், ‘சத்தியபுத்திரா’ என்று குறிக்கப்படுவதாக எழுதப்பட்டுள்ளது.
‘திருவிதாங்கூர் தொல்லியல் வரிசை’ தொகுதி 1ல், து.அ.கோபிநாதராவ் அவர்களால், பார்த்திவ சேகரபுரம் சாசனம் பதிப்பிக்கப்பட்டது; இது நிகழ்ந்தது, 1908ம் ஆண்டில். 57 ஆண்டுகளுக்கு முன் இந்த சாசனம் பதிப்பிக்கப்பட்டதாக, நூலின் பக்கம் 40ல், ராசசேகர தங்கமணி எழுதியுள்ளார்.
பழமையான செப்புத் திருமேனிகள் கடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற முதன்மையான நோக்கத்துடன் இந்திய அரசு, 1974–75ம் ஆண்டுகளில், தொல்கலைப் பொருள் பதிவு அலுவலர்களை நியமித்தது. இந்த நூலின் பக். 21ல், ‘நல்ல வேளையாக இந்த ஆண்டு முதல், கோவில் சிலைகள் திருட்டு போகா வண்ணம் தடுக்க, அரசு பதிவு அலுவலர்களை நியமித்துள்ளது’ என, எழுதப்பட்டுள்ளது. இவை போன்ற தவறுகளை, மெய்ப்பு திருத்த நிலையிலேயே சரிபார்த்து திருத்தியிருக்கலாம்.
‘புத்தக விமர்சனத்திற்கு மட்டும், இந்தப் புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்ட அனுமதிக்கப்படுகிறது’ என, தெளிவாகக் குறிப்பிட்டுள்ள பதிப்பாளர்கள், எவ்வளவு அலட்சியமாக வரலாற்று நூல்களைக் கையாள்கின்றனர் என்ற அவல நிலையையே இது புலப்படுத்துகிறது.
‘முதல் பதிப்பு ஜூலை 2015’ என்ற விவரம், என்ன  பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது புதிராகவே உள்ளது.
(கட்டுரையாளர் – கல்வெட்டு அறிஞர்)

எஸ்.இராமச்சந்திரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us