‘இனியவளே வா... கால் சிலம்புகள் கண்ணகியிடமே இருக்கட்டும். கானல் வரிகள் கனவிலும் வேண்டாம். நாம் மூவரும் இணைந்து, இங்கே சிலப்பதிகாரத்தைத் திருத்தி எழுதுவோம்’ என்று சொல்லும் மோகன்தாஸ், ஒரு அருமையான முக்கோணக் காதல் கதையை தந்திருக்கிறார்.
கோபியின் காதலி யாமினி. இருவரும் வேளாங்கண்ணிக்கு, சுற்றுலா செல்கின்றனர். ஒரு மழைநாளில் அவர்கள் முதலிரவு. இடி எனும் மேளதாளத்தோடு, மின்னல் தெறிக்கும் மத்தாப்போடு, காற்று எனும் சாமரத்தோடு, மழை எனும் அட்சதையோடு அங்கே நடந்து முடிகிறது.
முறைப் பெண் ராணியை மணந்து கொள்ளச் சொல்லிப் பெற்றோர் வற்புறுத்துகின்றனர். தன்னை கர்ப்பமாக்கி விட்டு, காதலன் வேறு ஒருத்தியை கட்டிக் கொள்ளப் போவதையும் ஏற்றுக்கொண்டு, கல்யாண பத்திரிகையை அவனிடம் இருந்து வாங்கிப் படிக்கும் கொடுமைக்கு ஆளாகிறாள் யாமினி.
அவள் தற்கொலை செய்து கொள்ள, தூக்க மாத்திரைகளையும் வாயில் போட்டுக் கொள்கிறாள். அப்புறம் என்ன ஆயிற்று?
அருமையான இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்.
– எஸ்.குரு