நூலாசிரியர் காந்தியடிகள் மீது மட்டற்ற மரியாதையும், பக்தியும் கொண்டவர். நீண்ட நாட்களாக, காந்தியடிகள் அவதரித்த இடமான போர்பந்தரைச் சென்று தரிசிக்க வேண்டும் என்ற அவரது ஆவல், கடந்த, 2011ம் ஆண்டில் நிறைவேறியது. அங்கு சென்று ஒவ்வோர் இடத்தையும் இவர் பார்வையிட்ட போது, காந்தியடிகளின் இளமைப் பருவத்தில் இருந்து அவரது இறுதி நாட்கள் வரை நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள், இவர் மனதில் நிழலாடின.
அவற்றை ஒன்று விடாமல் போட்டோ பிடிப்பது போல் நூலில் பதிவு செய்திருக்கிறார். காந்தியடிகளின் எத்தனையோ போதனைகளில், 25 அறிவுரைகளைப் பட்டியலிட்டு, அவற்றை மிக இளம் வயதிலேயே சிறுவர்கள் மனதில் பதிய வைத்து விட்டால், பிற்காலத்தில் அவர்கள் ஒழுக்கமான, நேர்மையான மனிதர்களாக வாழ வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இதுவரை கேள்விப்பட்டிராத பல சுவையான சம்பவங்களை இந்த நூலில் எழுதியுள்ளார். ஆங்கிலத்தை எளிய நடையில் எழுதுவது தான் மிகவும் கஷ்டம் என்பார் ராஜாஜி. ஆனால் இந்த நூலாசிரியர், எளிய நடையில் எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்.
மயிலை சிவா