பள்ளி செல்வதென்றால், சலிப்பு, கோபம், வெறுமை, பயம், பிடிக்காத ஒன்றை வலுக்கட்டாயமாக திணித்தல், என்பது தான் குழந்தைகளின் எண்ணம். காலத்திற்கு ஏற்ப கல்விமுறை மாறினாலும், படிக்கும் குழந்தைகளின் மனோபாவம் ஏனோ மாறுவதில்லை. அதிலும் குறிப்பாக, அறிவியல், கணிதம் போன்ற பாடங்களை நினைத்தாலே குழந்தைகளுக்கு வெறுப்பு தான்.
குறை, அந்த பாடங்களில் இல்லை; கற்பிக்கும் முறையில் தான் இருக்கிறது. இது, புதிய கண்டுபிடிப்பு அல்ல. மாறாக, பல ஆண்டுகளாகவே கூறப்படும் ஒன்று. அதற்கேற்ப கற்பிக்கும் நடைமுறையை மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், இதுதொடர்பாக பல ஆய்வுகளை நடத்தி, அதற்கு ஏற்ப அவ்வப்போது பல மாற்றங்களை செய்து வருகிறது. அதுபோலவே, தமிழகத்திலும் கற்றலை இனிமையாக்குவதற்கு, கல்வித் துறையும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனடிப்படையில், கல்வித் துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட நூலாசிரியர் சதாசிவம், இந்த நூலை உருவாக்கியுள்ளார். வழக்கமான கல்வி முறை அல்லாமல், ‘அறிவொளி இயக்கம்’ போன்ற மாற்றுக் கல்வி முறை திட்டங்களில் பணியாற்றிய நீண்ட அனுபவத்தின் அடிப்படையில், ‘மகிழ்வுடன் கற்றல்’ எப்படி என்பதை விவரித்துள்ளார்.
நமது அன்றாட வாழக்கையில், ஒவ்வொரு செயலிலும் அறிவியல் பொதிந்து கிடக்கிறது என்பதை விவரித்துள்ளார். சின்ன சின்ன சோதனைகள் மூலம்,
அறிவியலை, குழந்தைகள் மனதில் பதியச் செய்யும் சிறந்த முயற்சி, இதுபோன்ற, 50 பரிசோதனைகளை, தேவையான படங்களுடன் நூலில் விளக்கியுள்ளார். அறிவியலை எளிமையாக புரியவைக்கும் இந்த முயற்சி, மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இந்த சோதனைகள் அனைத்தும், எளிய படங்களுடன், சிறிய குழந்தைகள் கூட புரிந்து கொள்ளும் விதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இதுபோன்ற எளிமையான அறிவியலை புரிந்து கொள்ளும் விதமான வாய்ப்புகள் அதிகம்.
தமிழக்தில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் அரிது. அவர்களுக்கு இந்த நூல், ஊக்கமாக அமையும்.
-ஜே.பி.,