கற்பித்தலின் நுட்பங்களை பேசுகிறது இந்த நூல். வகுப்பறை வடிவமைப்பை கலைத்துப் போட்டு, கற்கும் அனுபவங்களை புதுப்பிக்கும் வகையிலான கட்டுரைகள் இதில் உள்ளன. கல்லூரி பேராசிரியராக வகுப்பறை சார்ந்தும், அறிவொளி இயக்கத்தில் கிராமப்புறங்களில் கற்பித்தல் சார்ந்தும், பொதுவெளியில் மாணவர்களின் திறனை மதிப்பிடுவதில் நுட்பங்கள் சார்ந்தும், 17 பதிவுகள் இந்த புத்தகத்தில் உள்ளன.
நூலாசிரியரின் பொறுப்புடைமை, சொற்களின் வழி ஒளிர்கிறது. தட்டையான தத்துவத்தில் பயணிக்கவில்லை என்பதை அவர் வரிக்குவரி உணர்த்திக் கொண்டே இருக்கிறார். அனுபவங்களை உள்வாங்கி, நெகிழ்ச்சியை கற்பித்தலாக்குகிறார்.
விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகவும் சுவாரசியமானவை. அன்றாடம், பொதுத்தளத்தில் கவனிக்கத் தவறும் விஷயங்கள். அவற்றின் விரிவையும் ஆழத்தையும் எளிய மொழிநடையில் சொல்கிறார். மேலிருந்து கீழ்நோக்கிய தகவல் தொடர்பு, கற்பித்தல் சூழலுக்கு உகந்தது இல்லை என்பது வெளிப்படுகிறது. பொது விவாதங்களை ஒருங்கிணைப்பதற்கான உத்திகள், உலகின் பல பகுதிகளில், கற்பிப்பதில் மாற்றுத்திறன்களை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் பற்றியும் பேசப்பட்டுள்ளது.
ஆர்.மலர்அமுதன்