சிவபெருமானின் வடிவாக, கோவில்களில், லிங்கத் திருவுரு வழிபடப் பெறுகிறது. அந்தச் சொல் மற்றும் வடிவத்தை, மொத்தம் 24 கலிப்பாத் தாழிசை பாடல்களிலும் அவற்றிற்கான விளக்கத்திலும், நூலாசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார். கி.பி., 1648ம் ஆண்டில், அந்நியர் படையெடுப்பால், சிதம்பரத்தில் இருந்து, நடராஜரை வெளியூருக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், தற்போதைய புளியங்குடியில், ஒரு புளியமரத்தில் இருந்த பெரிய பொந்தில், நடராஜரை வைத்து ஒரு குடும்பம் பாதுகாத்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் தான், இந்த நூலாசிரியர். ‘சிவம்’ என்ற பெயரை, ‘சிவ்+அம்’ எனவும், ‘இலிங்கம்’ என்பதை, ‘இல்+இங்கு+அம்’ எனவும், ‘அண்டம்’ என்பதை, ‘அண்டு+அம்’ எனவும், தமிழ்ச் சொற்களாகக் கொள்கிறார் நூலாசிரியர். நான்கு மற்றும் ஐந்தாவது பாடல்களில், அணுக்களின் நெருக்கத்தால், செறிவால், அண்டமும், அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருள்களும் உருவாகின; வான்வெளியில் உள்ள இந்த அணுக்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து உயிர்களை ஈர்க்கும்; இந்த உயிர்க் கூட்டங்களின் அமைப்பே லிங்கத்தில் உள்ள ஆவுடை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
ப.லட்சுமி