‘தன்னுடைய நன்மைக்காக பிறருக்கு தீமை செய்யும் மனிதர்களை மனுஷ்ய ராட்ஷசர்கள்’ என, சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா சுவாமிகள் கூறும் அருளாசியுடன் தொடங்கும் மலர் ஆன்மிக மலராகும்.
ஆதிசங்கரர் தொடங்கிய நான்கு மடங்களில் தலையாயதான சிருங்கேரி மடத்தின் தர்ம நெறிகளை தாங்கி வரும், ‘அம்மன் தரிசனம்’ மாத இதழ் தீபாவளி மலர், பல்வேறு கருத்துக்களை கொண்டிருக்கிறது.
பொருளீட்டுவதும், இன்பம் துய்ப்பதும் அறவழியில் அமைய வேண்டும் என்ற சுவாமி ஓங்காரநந்தர் கருத்து, யாருக்கு ரகசியங்களை கூறக்கூடாது என்ற விதுர நீதிக் கருத்து, உலகனைத்தும் ஒன்றாக காணும் வழியே தேவை என்னும் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் கட்டுரை எனப் பல்வேறு சிறப்புகளை இம்மலர் கொண்டிருக்கிறது.
கம்போடிய நாட்டில் ஆயிரம் லிங்க வழிபாடு, இந்திரா சவுந்தரராஜனின் கம்பனின் அரங்கேற்றம், உட்பட பல கருத்துக்கள் தெளிவான ஆன்மிக அறிவை விரும்பும் பலருக்கு நல்விருந்தாகும். அட்டைப் படத்தில் ஸ்ரீராஜகோபால சுவாமியின் அழகும், அதை அடுத்து, சகல செல்வங்களையும் தரும் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர், ஆதிசங்கரர், குரு பரம்பரை ஆராதிக்கும் அன்னை சிருங்கேரி சாரதை, நாடு முழுவதும் பயணித்து, தர்மநெறியைப் பரப்பிய ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த மகா சுவாமிகள் வண்ணப்படம் ஆகியவை இந்த மலரில் ஆன்மிக நேர்த்திக்கு அடையாளமாக உள்ளது.