திணை என்பது ஒழுக்கம், கோட்பாடு என்பது கொள்கை. பாடாண்திணை என்பது பாடப்படும் ஆண் மகனது ஒழுகலாறு, பழக்க வழக்கங்கள் என்று அறியப்படுகிறது. திணை என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவு நெறி எனலாம்.
திணை கோட்பாடு என்ற நூலில் தொல்காப்பியம் – இலக்கியத் திறனாய்வுத் தொடங்கி, இலக்கியக் கோட்பாடுகள் வரை ஏழு தலைப்புகளில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ் மொழி தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. ஆனால், இலக்கியம் என்பது இலக்கிய இயலார்க்கு மட்டுமே உரியது ஆகும். (பக்.2).
இன்று தமிழ் என்பது, ஊடக வியாபாரம், பட்டிமன்றம், சமயச் சொற்பொழிவு, கோவில், சடங்குகள், இவையே தமிழ் என்று அர்த்தப்படுத்தப்படுகிறது.
சிலப்பதிகாரம் என்றால் அதன் இலக்கிய இயல் சார்ந்த அறிவு மழுங்கடிக்கப்பட்டு பொதுவான கதை சார்ந்த கருத்தாடல்களே முன்வருகின்றன. இன்று திறனாய்வு என்ற சொல்பயன் படுத்தப்படும் அதே பொருளில் திறத்தியல் என்பது தொல்காப்பியத்தில் உள்ளது.
இலக்கியத்தை தமிழ்க் கோட்பாடு நோக்கில் மதிப்பீடு செய்தல், கட்டமைத்தல் ஆகியனவை தொல்காப்பிய மரபு. மரபு என்ற சொல் எந்தெந்த இடங்களில் எப்படி பயன்படுத்தப்படுகிறது. மரபு என்றால் தொன்றுதொட்டு வரும் வழக்கம் என்ற பொருள் நிலையில் இருந்து மாறி, மரபுக் கவிதை என்றால்
இலக்கணத்தோடு அமைந்த பாடல் என்ற பொருளில், மரபு என்ற சொல் ஆளப்பட்டுள்ளது என்பதை அழகாக விளக்கியுள்ளார்.
திணை என்ற சொல்லைத்தான் தொல்காப்பியத்தில் காண்கிறோம். கோட்பாடு என்று அதை அடையாளம் காட்டுவது இன்றை அணுகு முறையாகும். குறிஞ்சி என்ற சொல் எந்தெந்த இடங்களில் எத்தகையப் பல பொருளைச் சுட்டுகிறது என்பதை அருமையாக விளக்கியுள்ளார்.
தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை என்ற இரண்டிலும், காஞ்சித்திணை எவ்வாறு மாறுபட்ட பொருண்மைகளை விளக்குகிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களாக சில நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன.
(பக். 46). இலக்கணம் என்ற சொல், கோட்பாடு என்பதற்கு நிகராக விளங்கப்பட்டுள்ள சொல் எனலாம். இலக்கியம் எப்படி உருவாக்கம் பெற வேண்டும் என்று உரையாசிரியர் விளக்கியுள்ளார்.
கடந்த, 2,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டுப் போர் மறவியலையும், காமநுகர்ச்சியையும் கருத்திலியலாகக் கொண்டு அகம் – புறம் சார்ந்த கலைச்
சொற்களுடன் உருவாக்கப்பட்டதே திணை கோட்பாடாகும். (பக். 53). தொல்காப்பியத்திற்குப் பின் வந்த புறப்பொருள், வெண்பாமாலை என்னும் நூலில், புதிய கலைச் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம், பாரதியார் பாடல்கள் ஓர் இலக்கியப் கோட்பாடுகளை உள்ளடக்கி, எக்காலத்தும் ஏற்றுப் போற்றும் அமைப்பு கொண்ட அழகியல் கோட்பாடு உடையதாகும் என்ற செய்தி இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நூல் இலக்கணம் குறித்த ஆய்வு நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தற்காலச் சூழலில் எவ்வாறு மாற்றம் பெற வேண்டும் என்பதையும் பல்வேறு சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணத்தில் ஆய்வு செய்வோர்க்கு இந்த நூல் ஒரு திறவு கோல் என்று சொல்லலாம்.
பேராசிரியர் முனைவர் ஆர்.நாராயணன்