நவீன நாடக இயக்கங்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்து ஆசிரியர் பேசுகிறார். ஜாம்பவான்கள் குறித்தும் அலசுகிறார். இப்பொழுது, 80 வயதில் பயணிக்கிற ந.முத்துசாமியின் முதல் நாடகம் அவரின், 33வது வயதில் வெளிவந்திருக்கிறது. அதிலிருந்து நாடக ஆசிரியராகவே இருந்து வருகிறார்.
ந.முத்துசாமி என்ற ஆளுமையை எந்த வகையிலும் கடக்காமல், எவரொருவரும், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகம் பற்றி பேச முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை என்கிறார். ‘என் நினைவுத் தடங்களில் பேராசிரியர் சே.இராமானுஜம் எனும் தமிழ் நாடக ஆளுமை’ என்ற கட்டுரையும் சிறப்பானது.
பாகுபலி, இறுதிச் சுற்று, காக்கா முட்டை முதலிய மூன்று திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்களும் சிறப்பாக உள்ளன.
சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையில், ‘ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றானதும், முதன்மையானதுமான இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் தமிழுக்குக் கிடைத்திருக்கும் இலக்கிய வரம்; சிலம்பின் மதுரைக் காண்டம் வரையிலான பகுதிகள், கிரேக்கத் துன்பியல் நாடகங்களுக்கு இணையானவை. வேறு எந்தக் காப்பியத்தையும் போலன்றி, இதையொன்றை மட்டுமே, ‘நாடகக் காப்பியம்’ என்பதாக இனங்களுக்கு கொண்டு நம் முன்னோர் வணங்கத்தக்கவர்கள்! என்று கூறுகிறார். இலக்கிய அன்பர்கள் விரும்பும் நூலாக அமையலாம்.
எஸ்.குரு