மருந்தாகும், 30 குழம்புகளின் செய்முறைகளைத் தொகுத்து, ‘உடல்நலம் காத்திடும் உன்னதக் குழம்புகள் (குழம்பே மருந்து, குழம்பாமல் அருந்து)’ என்னும் தலைப்பில் நூலாகத் தந்த சரஸ்வதி அரங்கராசன், 30 வகைத் துவையல்களின் செய்முறைகளை நலம் தரும் சமையல், நாளொரு துவையல் (உணவு மருந்தா கலாம்; மருந்தே உணவாகலாமா?) என்னும் இந்நூலில் விளக்குகிறார்.
தூதுவளை, ஓமவல்லி போன்ற மூலிகைகள், புதினா, காசரை போன்ற கீரைகள், புடலை, பீர்க்கு போன்ற காய்கறிகள், கொள்ளு, துவரை போன்ற பயறுகள், கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துகள், பூண்டு, வடகம் போன்ற அஞ்சறைப்பெட்டி அதிசயங்கள் ஆகியவற்றாலான முப்பது வகைத் துவையல்களின் செய்முறைகளை இந்நூலில் விளக்கமாகவும் தெளிவாகவும் எளிமையாகவும் கூறியுள்ளார் ஆசிரியர்.
ஒவ்வொரு மூலிகையிலும் அடங்கி உள்ள சத்துகள், அந்தந்த மூலிகைகளால் குணமாகும் நோய்கள் பற்றிய விபரங்கள், அந்தந்த மூலிகைகள் பற்றி அகத்தியர் குணபாடம், போன்ற சித்த மருத்துவ நூல்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகள், பாடல்கள், ஒவ்வொரு மூலிகையையும் பற்றிய திருவருட்பிரகாச வள்ளலார் சுவாமிகளின் கருத்துகள் போன்ற பல செய்திகள் நூலுக்குக் கூடுதல் சிறப்பைத் தருகின்றன.
நூலில் இடையிடையே ஒப்பனைக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் போன்றவையும் சுவையாகத் தரப்பட்டுள்ளன. இக்கால இளைய தலைமுறையினரும் மூலிகைகளை அடையாளம் காண வாய்ப்பாக, ஒவ்வொரு மூலிகைக்கும் மும்மூன்று வண்ணப்படங்கள் நூலில் பின் இணைப்பாகத் தரப்பட்டுள்ளன.
‘சமையற்கலை வல்லுனர்’ மல்லிகா பத்ரிநாத், சமூகநல ஆர்வலர் லீலா சங்கர் அளித்துள்ள அணிந்துரையும், ஆய்வுரையும் நூலின் நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன. பக்க விளைவு இல்லாமல் இயற்கையான பாரம்பரிய முறைப்படி உடல் நலத்தைக் காத்துக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய மருத்துவச் சமையற்கலை நூல்.
பன்னிருகை வடிவேலன்