நூலாசிரியர் குன்றில் குமார் கூறும் கருத்துக்கள், அதிசயம். ஆனால், உண்மை என்ற நிலையில் விளக்கம் பெறுகின்றன. அமேசான் காடுகளில் காணப்படும் ஒரு வகை மரம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி நம்ப முடியாத அதிசயங்களும், வியப்பும், அமேசான் காடுகளில் ஏராளமாக உள்ளன.
‘அமேசான்’ என்றால் மரங்களை அழிக்க வல்லவன் என்று அப்பகுதிமக்கள் மொழியில் அர்த்தமாம். தென் அமெரிக்காவில், பிரேசில், பெரு, பொலிவியா, கானா, ஈக்வெடார், கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் விரிந்து பரந்து கிடக்கிறது அமேசான் காடுகள்.
உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடு. வருடம், 365 நாளும் மழை பொழிகிறது. இக்காடுகளில், 100 சதவீதம் ஆக்சிஜனைப் பெற முடிகிறது என்பது மற்றொரு அதிசயம். உலகில் உள்ள மொத்த ஆக்சிஜனில், 20 சதவீதம் இங்கு கிடைக்கிறது.
அமேசான் மழைக்காடுகளில், பெரு நாட்டின் பகுதியில் மர்ம நதி ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. நதிகளில் மர்ம நதியா? விசித்திரம் தான். பெரு நாட்டில் பாயும் அமேசான் நதியில், 64 கி.மீ., நீளத்திற்கு மட்டும் நதியின் நீர், சுடுநீராகக் கொதிக்கிறது (பக்.26). உலகின் மிகப்பெரிய நதிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது அமேசான்.
உலகின் மொத்தத் தாவரங்கள் மற்றும் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் உள்ளன. இவை போன்ற எண்ணற்ற தகவல்களை கொண்டிருக்கும் நூல்.
பாதாள ஆறு, வெப்ப ஆறு போன்ற பல மர்மமான நதிகளை உள்ளடக்கிய அமேசான் ஆறு, மற்றொரு நம்ப முடியாத ஆற்றையும் உள்ளடக்கியது. அது தான் பறக்கும் ஆறு. இந்த ஆறு, அமேசான் காட்டுப் பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருக்கிறது. முற்றிலும் நீராவியால் உருவாகியுள்ள இந்த ஆறு, தரையில் ஓடும் சாதாரண ஆற்றில் உள்ள நீரோட்டத்தைப் போலவே, இதிலும் நீரோட்டம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மின்சார ஈல்ஸ் என்றொரு வகையான உயிரினம். ஆங்கிலத்தில் இதை, ‘எலக்ட்ரிக் ஈல்ஸ்’ என்கின்றனர். தன் எதிரியை வீழ்த்த வேண்டும் என்றால், தன் உடலில் இருந்து, 600 வாட்ஸ் மின்சாரத்தைப் பாய்ச்சி தன் பவரைக் காண்பித்து விடுகிறது.
பிரானா என்றொரு மீன் உள்ளது. கூட்டம் கூட்டமாக வாழும் இந்த மீனின் உணவு, மாடு, மான் போன்றவை. பயங்கரமான ராணுவ எறும்புகள் அமேசான் காடுகளில் காணப்படுகின்றன (பக்.59). உலகிலேயே மிகக் கொடிய விஷம் உள்ளதாக அறியப்படுகிறது.
ஆச்சரியமும், அமானுஷ்யமும் சூழ்ந்த மிகப் பயங்கரமான காடாக விளங்கி வருகிறது. இந்தக் காட்டைப் பார்ப்பதற்குச் சென்றவர்களில் சிலர் திரும்பி வரவே இல்லை.
அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து, அங்கு எண்ணெய் கிணறுகள் தோண்டும் பணி கடந்த, 1970ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
அப்பொழுது அமேசான் நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது. அமேசான் காட்டில் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் ஆமையின் கண்ணீரைத் தண்ணீராகக் குடிக்கின்றன. இப்படிப் பல தகவல்கள்.
ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகளைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
– பேராசிரியர் நாராயணன்