பேராசிரியர் சேதுப் பிள்ளையிடம் கம்ப ராமாயணப் பாடம் கேட்ட புலமையாலும், கல்லுாரியளவில் தமிழ் பயிற்றுவித்த அனுபவத்தாலும் ஆழ்ந்தகன்ற புலமை நலம் பெற்றவர், புதுவை வாழ் பேராசிரியர் அ.பாண்டுரங்கனார்.
வைணவ நூல்களையும், பிற நூல்களையும் ஆராய்ந்து ஆழங்கால் பட்ட பெருமைக்குரியவர். நூல்கள் பல வெளியிட்டுப் புகழ் பெற்றவர்.
சங்க இலக்கியங்களில் வரும், ராமகாதைக் கூறுகளை ஆராய்ந்தவர். ஆதி காவியமான வான்மீகரின் ராமாயணத்தை நன்கு அறிந்தவர். கம்பனை, பல கோணங்களில் அணுகி ஆராய்ந்தவர்.
ஆழ்வார்களின் பாசுரங்களில் அமைந்த ராமாயணத்தையும் பயின்று மேன்மை பெற்ற வைணவர்.
இந்நூலில் கம்பரது ராமாயணக் காவியத்தையும், வான்மீகரின் ராமாயண இதிகாசத்தையும் பல்லாற்றானும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். ஆழ்வார்களைப் பின்பற்றிப் பல இடங்களில் கம்பன் பாடியுள்ளமையையும் விளக்கியுள்ளார்.
அகநானுாறு, சிலப்பதிகாரம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி, திருக்குறள் முதலிய நூல் பகுதிகளை மேற்கோள்களாகப் பொருத்தமுறக் காட்டியுள்ளமை நூலாசிரியரின் புலமையை வெளிப்படுத்துகின்றது.
வைணவ மரபுகளை அறிந்த பேராசிரியர் படைத்துள்ள இந்நூல், அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நல்ல நூல்.
– பேரா., ம.நா.சந்தான கிருஷ்ணன்