ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்நூறு பாடல்களையும் உருபன் அடிப்படையில் பகுத்து, உரையுடன் இந்த நூலின் முதற்பகுதி தருகிறது. இரண்டாம் பகுதியில் ஐங்குறுநூற்றில் வரும் சொற்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அகர வரிசைப்படுத்தப்பட்டு இலக்கணப் பொருளும், ஆங்கில இலக்கண விளக்கமும், தமிழ்ச் சொல்லும் வழங்கப்பட்டுள்ளன.
நான்காம் பகுதியில் சொற்கோவையில் இடம் பெற்றுள்ள சொற்கள் வரும், ஐங்குறுநூற்றுப்பாடல் எண்ணும், அடி எண்ணும் தரப்பட்டுள்ளன. ஐந்தாம் பகுதியில் ஐங்குறுநூற்றுச் சொற்களுக்கு இலக்கண விளக்கம் தமிழிலும், ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளது.
ஆறாம் பகுதியில் இலக்கணப் பொருண்மைகள் அகர வரிசைப்படுத்தப்பட்டு ஆங்கில மொழியாக்கமும், தமிழில் எடுத்துக்காட்டும் தரப்பட்டுள்ளன. ஏழாம் பகுதியில் ஆங்கில இலக்கணப் பொருண்மைகள் தமிழில் விளக்கப்பட்டு உள்ளன.
எட்டாம் பகுதியில் இலக்கணக் குறிப்புகளின் வருகையும், தமிழ் விளக்கமும் தரப்பட்டுள்ளன.
எட்டுப் பகுதிகளைக் கொண்ட இந்த மொழியியல் ஆய்வு நூல், இரண்டு பேராசிரியர்களின் உழைப்பைக் கொண்டுள்ளது.
மொழியைக் கலைத் துறையிலிருந்து பிரித்து, அறிவியல் துறைக்குள் கொண்டு செல்லும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
உருபனியல் பகுப்பாய்வு என்னும் பொருண்மையைத் தாண்டி, வைப்பு முறையிலும், புதுமையைக் கொண்டுள்ள இந்நூல், இலக்கண ஆய்வாளர்களாலும், மொழியியல் ஆய்வாளர்களாலும் போற்றப்படும்.
–முகிலை ராசபாண்டியன்