வேற்றுமொழி மன்னர்களால் சிதைக்கப்பட்டும், தீக்கிரையாகியும் கரையான்களால் அரிக்கப்பட்டும் காணாமல் போன பழந்தமிழ்ச் சுவடிகள் பலவற்றுக்கு மத்தியில் கிடைத்த சில அரும்பெரும் சுவடிகளை அச்சு வாகனமேற்றி நூலாக்கம் செய்த பெருமைக்குரியவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர்.
அவரது வாழ்வியல் வரலாற்றைக் கூறும் நூலே என் சரித்திரமாகும்.
இந்நூல், முன்னரே பல பதிப்புகளைக் கண்டது தமிழுலகம் அறிந்த ஒன்று. ஆயினும், செம்பதிப்பாக மற்றவற்றிலிருந்து வேறுபட்டு வெளிவந்துள்ளது காலச்சுவடு பதிப்பு. ஏனெனில், என் சரித்திரத்தின் சிறப்பு உ.வே.சா., என்னும் அறிஞரின் பன்முக ஆளுமை ஆகிய இவற்றை எல்லாம் ஆழமான ஆய்வுரையாக, இப்பதிப்பில் முனைவர் ப.சரவணன் வழங்கியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நூல் நன்றியுரை, பதிப்புரை, என் சரித்திரம், கி.வா.ஜகந்நாதன் அவர்கள் எழுதிய, ‘என் ஆசிரியர் பிரான்’ என்னும் என் சரித்திரத்தின் இரண்டாம் பகுதி, உ.வே.சா.,வின் வாழ்க்கை குறிப்பு அடங்கிய பின்னிணைப்பு, கொடிவழி, உ.வே.சா., தமிழுலகிற்கு அளித்த நூல்களின் பட்டியல், பெயர், பொருளடைவு ஆகிய பகுதிகளோடு விரிவாகப் பதிப்பாக்கம் பெற்றுள்ளது.
இந்நூலின் பதிப்புரை இப்பதிப்பின் சிறப்புக்களை நமக்கு விளங்க வைக்கிறது. ஒவ்வொரு தமிழ் நூலின் மூலச் சுவடியையும் தேடிப் பிழைகளற்றுப் பதிப்பிக்கப் பாடுபட்டதையும், அவரது தன் வரலாறு எழுந்ததன் காரணத்தையும், அதன் பின்னணியையும் தேடி எடுத்துப் பதிப்பித்து உ.வே.சா.,வுக்குப் பெருமை சேர்த்துள்ளது இந்நூல்.
உ.வே.சா., தன் வரலாறு எழுதக் காரணமானவர் கல்கி என்பதையும், அவரின் தொடர்ந்த வற்புறுத்தலே உ.வே.சா.,வின் என் சரித்திரம் உருவாக்கத்திற்கு வழி வகுத்தது என்பதையும், என் சரித்திரம் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது குறித்ததுமான நூலுருவாக்கப் பின்புலம் குறித்த பல செய்திகளை இப்பதிப்புரையில் காணமுடிகிறது.
அது மட்டுமன்றி, ‘என் சரித்திரம்’ ஆனந்தவிகடனில் வெளியான போது, அவ்விதழில் சேர்க்கப்பட்டிருந்த பல படங்களை அப்படியே இந்நூல் வெளியிட்டுள்ளது.
இவை தவிர, சொற்கள், தொடரமைப்பு, தலைப்பு ஆகியவை மாற்றம் செய்யப்பெற்று, ‘என் சரித்திரம்’ நூல் வெளியாகியுள்ளதைச் சுட்டிக்காட்டி, தற்போதைய இப்பதிப்பின் உண்மைத் தன்மையை பதிப்புரை எடுத்துரைத்துள்ளது. சான்றாக: விகடனில் உ.வே.சா., பயன்படுத்தியுள்ள, ‘அப்பியாசம்’ - என்பது, ‘பயிற்சி’ என்றும், ‘அபிப்பிராயம்’ என்பது, ‘கருத்து’ என்றும் மாற்றப்பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுள்ளது. 16ம் தலைப்பு - மாயூரம் சேர்ந்தது. -
இது, ‘மாயூரப் பிரயாணம்’ எனவும் மாற்றப்பெற்றுள்ளதைக் குறிப்பிட்டுள்ளது. இது தவிர சில வார்த்தை மாற்றங்கள், இடைச்செருகல் ஆகியன நேர்ந்துள்ளதையும் இப்பதிப்புரை சுட்டிக்காட்டுகிறது. மேலும், தொடர்களை எழுதும்போது, உ.வே.சா., ‘கொண்டு’ என்னும் விகுதியைப் பயன்
படுத்தி எழுதியிருக்க, நூலாக்கத்தில் இவ்விகுதி சிதைக்கப் பெற்றிருப்பதையும் இப்பதிப்புரை சான்றுடன் சுட்டிக்காட்டுகிறது.
இந்நூல் முற்றுப்பெறும் முன்னமே, உ.வே.சா.,வின் மறைவு ஏற்பட்டு விட்டதால், அவரது அரிய குறிப்புகளின் உதவியோடு கி.வா.ஜா., அவர்கள் எழுதிய, ‘என் ஆசிரியப் பிரான்’ என்னும் பகுதியும் பகுதி – 2 ஆக இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெருங்கதை, தக்கயாகப்பரணி முதலிய நூல்களின் பதிப்பு வரலாற்றையும், உ.வே.சா.,வின் சென்னை வாசம் குறித்த பல செய்திகளையும், அவரின் மறைவு வரையிலான பல முக்கிய நிகழ்வுகளையும் அறியமுடிகிறது.
இவை தவிர நூலின் பின்னிணைப்புப் பகுதிகளாக அமைந்தவை பல வகையிலும் பயன்பெறும்படி செறிவாக அமைந்துள்ளன. உ.வே.சா., மறைவுக்கு முன், 98 நூல்கள் வெளிவந்துள்ளதையும், மறைவிற்குப் பின், 10 நூல்கள் வெளிவந்துள்ளதையும் அறிய முடிகிறது.
பல தமிழணிகளைப் பூட்டி அழகு பார்த்த தமிழ்மகனின் வரலாற்றை, ஒரு செம்மையாக்கம் பெற்ற பதிப்பாக, முனைவர் ப.சரவணன் வழங்கியுள்ளதை தமிழன்னை பெருமையோடு அணிந்து கொள்வாள் என்பதில் ஐயமில்லை.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்