தமிழ் இலக்கியக் கடலிலே, ஜெயகாந்தன் என்ற பேரலையால் மொத்துண்டு சிலிர்ப்படைந்த தமிழ் ரசிகர்கள் கோடானு கோடி. சில ரசிகர்களின் பார்வைகளை, எழில் முத்து தொகுத்திருக்கிறார். ஜெயகாந்தனுக்கு எழுத்து ஜீவனம் அல்ல, ஜீவன். ‘சரஸ்வதியின் அருள் பெற்று, அவள் கைப்பிடித்து நடந்த, எண்ணற்ற கலைக் குழந்தைகளின் கடைசிப் புதல்வனாகவேனும், நான் சென்றால் போதும்! அந்த, லட்சுமிதேவி என் பின்னால் கை கட்டி வருவதானால் வரட்டும்! வராவிட்டால் போகட்டும் என்று பேனா பிடித்தவன் நான்!’ என்று ஜெயகாந்தன் சொல்வார்.
சமஸ் என்ற எழுத்தாளர், ‘ஜெயகாந்தனின் அடையாளம் ஆரம்பக் காலம் தொட்டே அவருடைய கம்பீரமும், கர்வமும் தான். வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகம். சரியோ, தவறோ தன் மனதில் பட்டதை உடைத்துப் பேசும் ஜெயகாந்தன், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி அனைவரையுமே அவரவர் செல்வாக்கின் உச்சத்தில் இருக்கும்போது எதிர்த்து செயல்பட்டவர்; கடுமையாக விமர்சித்தவர் என்று கூறியிருக்கிறார்.
தி.க.சி., சொல்கிறார் (பக். 125), நாட்டு விடுதலைக்குப் பின், தமிழக ஆண், பெண், இளைஞர்களின் கல்வி அறிவு பெற்ற வாசகர்களின் கூட்டத்தில் ஒரு சலனத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய படைப்புகளை, ஜெயகாந்தன் வழங்கினார்.
ஜெயகாந்தன் எழுதுவதை சிறிது காலம் நிறுத்தியபோது, தி.க.சி., மிகவும் வருந்தினார்.
வெகுஜன பத்திரிகைகளுக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கும், அவற்றின் தமிழ் நடையை மாற்றி அமைப்பதற்கும், நடுத்தர மக்களிடையே சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை கலையழகுடன் விதைப்பதற்கும் தீவிரமாகச் செயல்பட்ட, ஜெயகாந்தனையும், அவரது எழுத்துக்களையும் பகிர்ந்து கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்! விமர்சன இலக்கியம்.
– எஸ்.குரு