வழக்கத்துக்கு மாறாக, புத்தக அளவும், பக்க எண்ணிக்கையும் குறைவாக இருந்தாலும், கையில் எடுக்கும்போது, கனமாக இருப்பதை உணர முடிந்தது; படைப்புகளின் தன்மை அத்தகையது.
காஞ்சி பெரியவரின் அருளாசியுடன் துவங்குகிறது, மலரின் அத்தியாயங்கள். ஓவியர் பத்மவாசனின் கை வண்ணத்தில் ஒளிரும் அட்டைப்பட விளக்கம், உள்ளே, ‘ஒரு தேவதையின் மழைப்படம்’ என்ற கட்டுரையில் வெளிப்பட்டுள்ளது.
வழுவழு தாளில், புத்தக வடிவமைப்பும் அசத்தல். அதற்கு பக்கபலமாக, கட்டுரை, கதை மற்றும் கவிதை என, ஒவ்வொரு பகுதியும் தேர்ந்தெடுத்த முத்து போல் பிரகாசிக்கிறது. முதல் பக்கத்தில், மலர் தயாரிப்பில் ஈடுபட்டவர்களுக்கு, தீபாவளி வாழ்த்து தெரிவித்ததிலிருந்து, கடைசி பக்கம் விளம்பரதாரர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் நன்றி செலுத்துவது வரை, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு படைப்பிலும், எழுத்திலும், ஓவியர் மற்றும் புகைப்படக்காரரின் புகைப்படங்களை வெளியிட்டு, அடையாளம் காட்டியிருப்பது சிறப்பு. தமிழின் பிரபல எழுத்தாளர்களின் பெரும்பாலோரின் படைப்புகள், இம்மலரில் இடம் பெற்றுள்ளன.
கேரள படகு வீடு மற்றும் சீன பயணக் கட்டுரை படிக்க சுவாரசியமாக உள்ளன.
ராஜாஜி எழுதிய, தமிழ் மறைகளின் பொருளை பற்றிய கட்டுரை, எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது அருமை.
இதழ் முழுக்க வண்ணத்தில் அழகிய படங்களும், படைப்புகளும் வெளியாகியிருப்பது, படிக்க படிக்க ஆர்வத்தை துாண்டுகிறது.