சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்ட விதிகள், மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அது, பல்வேறு மாநில இயற்கை மற்றும் மக்கள் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இதற்கான சட்டங்கள் மற்றும் விரிவாக்கத் தகவல்கள் ஆங்கிலத்தில் உள்ளன.
ஆகவே, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றும் ஆசிரியர், பல்வேறு தகவல்களை அணி அணியாக இந்த நுாலில் தருகிறார்.
தமிழில் புரியும்படி இவற்றை எழுதுவது சிரமம் என்பதை, இதில் உள்ள நெடிய வாசகங்கள் உணர்த்துகின்றன. இருந்தாலும், அதில் உள்ள சட்ட அம்சங்களை தெளிவாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதை இந்த நுாலில் காணலாம்.
அதனால், புத்தகம் ஆங்கிலம் – தமிழ் கலந்த நடையைக் கொண்டிருக்கிறது.
பல்வேறு தலைப்புகள் எளிதாக அமைக்கப்பட்டிருப்பதால், நிர்வாக இயந்திரத்தில் உள்ள பலரும் எளிதாக உணரலாம்.
இன்று அதிகம் பேசப்படும், ‘குப்பைப் பிரச்னை’யால் ஏற்படும் மாசு முக்கியமான அம்சம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று எளிதாக கூறினாலும், கிட்டத்தட்ட, 50க்கும் மேற்பட்ட தனித்தனி குறிப்புகளாக (பக்கம் 898) தரப்பட்டிருக்கின்றன.
அதில் நம்மை ஓரளவு சுத்தமாக வைத்திருக்கும், ‘குப்பை சேகரிக்கும் எளியவர்களை’ பற்றிய தகவலும் உள்ளது. இதைக் கையாள, இத்துறையில் மத்திய, மாநில அரசுகளின் கீழ் செயல்படும், 12 அமைப்புகள் உள்ளதைக் காணும் போதும், அவை வகைப்படுத்தப்பட்ட விதமும் நிச்சயம் சமூக ஆர்வலர்களை ஈர்க்கும். அதே போல, தண்ணீர் பயன்பாடு குறித்த சட்ட திட்டங்களும், இந்த நுாலைப் படிப்போர் கவனத்தை அதிகம் ஈர்க்கும்.
சமுதாயம் விழிப்புணர்வு பெற்ற சமயத்தில், இந்த நுால் நிச்சயம் சிலருக்கு பல தகவல்களை, சட்ட அடிப்படையில் புரிந்துகொள்ள உதவக் கூடும்.