உன்னத, ஒப்புயர்வற்ற காவியம் ராமாயணம். ராமன் வரலாற்றை முதன் முதலில் வடமொழியான சம்ஸ்கிருதத்தில் எழுதியவர் வால்மீகி. அதற்குப் பின், பல மொழிகளிலும் ராமாயணம் எழுதப் பெற்றுள்ளது.
இந்த நுாலை ஆங்கிலத்தில் எழுதிய டாக்டர் ஆர்.கிருஷ்ணன், ஒரு விஞ்ஞானி. அவருடைய பெற்றோர் காரணமாக, ராமாயணத்தின் மீது ஆர்வம் பிறந்து, ராமாயணச் சிறப்புகளை உணர்ந்து, அதன் பெருமைகளை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று கருதி, அதை அழகிய எளிய நடையில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
கதையின் இடை இடையே பொருத்தமான பயனுள்ள கருத்துக்களை எழுதியுள்ளார். இந்து காலண்டர் எனக் குறிப்பிட்டு திதிகள், வளர்பிறை (சுக்கிலபட்சம்), தேய்பிறை (கிருஷ்ணபட்சம்), மாதங்கள் குறிப்பிட்டு, வேத காலத்தில் பன்னிரு மாதங்கள் எவ்வாறு வழங்கப்பட்டன என எழுதியுள்ளார்.
தசரதனிடம் விசுவாமித்திரர் வருகை, அரக்கர்களை அழிக்க ராமனை அனுப்புமாறு தசரதனைக் கேட்டல், தசரதன் நிலை முதலானவற்றை விளக்குகிறார்.
செல்லும் வழியில் உள்ள இடங்களை பற்றி விசுவாமித்திரர் ராமனுக்குக் கூறும்போது, சிவன் தவமியற்றியமை, சிவன் தவத்தை மன்மதன் கலைத்தமை, சிவன் சினத்தால் மன்மதனை எரிந்தமை பற்றி எல்லாம் விவரிக்கிறார்.
தண்டச் சக்கரம், தர்மச்சக்கரம், காலச்சக்கரம், விஷ்ணு சக்கரம் முதலிய அஸ்திரங்களின் பெயர்களை வால்மீகி கூறியவாறு குறிப்பிடுகிறார். மகா விஷ்ணு தன்னிடம் வந்து யாசிக்கிறார் என ஆணவம் கொண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க, மகா விஷ்ணு பேருரு (விஸ்வரூபம்) எடுத்து மூன்றடியில் உலகை அளந்தார் என வால்மீகி எழுதியுள்ளார்.
ஆனால், பாகவத புராணம் முதலியவற்றில் திருமால் விஸ்வ ரூபம் எடுத்து இரண்டடியில் உலகை அளந்து மூன்றாவது அடிக்கு இடம் கேட்க, ஆணவம் அடங்கிய மகாபலி தன் தலையைக் காட்டினான். அவன் தலை மீது காலை வைத்து அவனைப் பாதாள உலகிற்கு அனுப்பினார் திருமால். அவன் மீண்டும் பூமிக்கு வர வரம் அருளியதால், ஆண்டுக்கு ஒரு முறை பூமிக்கு வருகிறார். அது ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
கதைப் பாத்திரங்களை, சிறு பாத்திரங்கள் முதலியோர் வரலாறுகளையும், குணங்களையும் விளக்கிச் செல்லும் முறை சிறப்பாக அமைந்துள்ளது.
படிக்கத் துவங்கினால் முழுவதும் படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் வகையில் எளிமையான ஆங்கில நடையில் எழுதப் பெற்றுள்ளது.
அனைவரும் படித்துப் பயன் பெறத்தக்க ஆங்கில ராமாயணம் நல்ல நுால்.
– புலவர் ம.நா.சந்தானகிருஷ்ணன்