வாழ்க்கையில் மன அழுத்தம் நிறைந்து சுயக்கட்டுப்பாடு இழந்தவர்களுக்கு தற்கொலை என்பது மிகப்பெரும் விடுதலையாகத் தோன்றுகிறது. விரக்தியின் உச்சத்தில் உயிரும் துச்சமாகத் தெரிகிறது. அடிப்படையில் மனிதன் தன் ஒவ்வொரு செயல்பாட்டிலும் எந்நேரமும் உயிர் பயம் கொண்டவன் தான்.
இந்த உலக வாழ்க்கையில் கிட்டும் இன்பங்களுக்காக எத்தனைத் துன்பங்களையும் தாங்குபவன். வாழ்க்கையின் மீதான பற்று, தற்கொலை எண்ணத்தைத் தள்ளி வைக்கிறது.
ஆழ்மனத்தின் அற்புத ஆற்றல்களை விளக்கும் முகமாக நுாலின் தலைப்பு இருப்பினும், தற்கொலைக்கான எண்ணங்களையும் தீர்வுகளையும் விளக்குவதாகவே அமைந்திருக்கிறது. சமூகச் சீரழிவைப் பிரதிபலிக்கும் பல்வகையான தற்கொலைகளை, குறிப்பாக மாணவர், விவசாயிகள், நடிகர்கள் ஆகியோரின் தற்கொலைக்கான காரணங்களும் இதில் விவாதத்திற்குள்ளாகிறது.
அதீத பயம், கொடிய வறுமை, பெருத்த அவமானம், வாழ்க்கை மீதே அவநம்பிக்கை, தீராத வியாதி, வலிகள், புறக்கணிப்புக்குள்ளாதல், மனம் ஒப்பா தோல்விகள், சமூக வெறுப்புகள் என்று பலவற்றாலும் உண்டாகும் மன அழுத்தம், சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்கிறது.
எந்தத் துயரத்திலிருந்தும் மீண்டு ஏதாவது நோக்கோடு வாழக்கூடியதே மனம் என்பது நுாலில் வலியுறுத்தப்படுகிறது. சிந்திக்க வைக்கிறது இந்நுால்.
–பிரபாகரபாபு