மானுட வாழ்வில் மகத்தான சாதனை செய்தவர் பலர். அவருள்ளும் இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள், 28 பேரின் வரலாற்றுப் பெட்டகம் இந்த நுால்.
இசைவாணர் நாகூர் ஹனிபா, சித்தர் குணங்குடி மஸ்தான், திரை இசைக் கவிஞர் கா.மு.ஷெரீப், ஆன்மிக குரு சீரடி சாய்பாபா, பேரரசர் அக்பர், எழுத்தாளர் முகமது பசீர், ஓவியர் ஹுசைன், திரைப் பாடகர் முகமது ரபி, எழுச்சி நாயகன் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், பறவை விஞ்ஞானி சலீம் அலி, தாஜ்மகால் எழுப்பிய ஷாஜகான், கொடை வள்ளல் சீதக்காதி என்று பல்துறை அறிஞர்கள் நம்மோடு இந்நுாலில் பேசுகின்றனர்.
இந்நால் நமக்கு வழங்கும் சுவையான சில செய்திகள்:
* நாகூர் ஹனிபா முறையாகப் பாட்டு கற்றதும் இல்லை; ஒத்திகை பார்த்ததும் இல்லை
* சீரடி சாய்பாபா சிவனை பூஜிப்பதை ஏற்றார். ஏசுவை ஏசுவதை ஏற்கவில்லை
* இந்தியாவின் ‘பிகாஸோ’ ஓவியர் ஹுசைன் மீது, 99 வழக்குகள் இருந்தன
* முஸ்லிம் ஜவ்வாது புலவரை, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் விடாமல் பெருங்கதவை அடைத்துவிட்டனர். அவர் பாடிய ஏழாவது செய்யுளில், கதவு தானே திறந்து கொண்டு அவரை அழைத்தது
* நபிகள் நாயகத்தின் வரலாற்றை வண்ணக் களஞ்சியப் புலவர், 1,714 விருத்தப்பாக்களில் ‘இராஜ நாயகம்’ என்ற காவியமாக பாடினர்.
பாரத சமுதாய, இலக்கிய கலை உலகிற்கு இசுலாமிய மேதைகள் அறிந்த கொடையை அழகு நடையில் கூறும் நுாலிது!
– முனைவர் மா.கி.இரமணன்