மூவேந்தர்களில், சோழர்களின் காலம் ஆன்மிகத்தின் பொற்காலம். கோவில்கள், இசை, நாடகங்கள், இலக்கியங்கள், செப்புத் திருமேனிகள் சோழர் காலத்தில் வளர்ந்து நிலை பெற்றன.
மாவீரன் தஞ்சை ராஜராஜனின் வீரமும், பக்தியும், கலை உணர்வும் வெளிப்படுத்தும் வண்ணம், ராஜராஜசோழன் நுாலை, ச.ந.கண்ணன் எழுதியுள்ளார். இந்நுாலை உள் வாங்கி இந்த வரலாற்று நுாலை, மிகச்சிறப்பாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர்.
ராஜராஜன் தஞ்சையில் கோவில் அமைத்தலும், இலங்கையில் கடல்வழி கப்பல் படையோடு, கால் பதித்ததும், படிப்பவர் நெஞ்சை நிமிர்த்துகிறது.
அவர் ஆண்ட, கி.பி., 985 – 1014 வரை, 29 ஆண்டுகளில் பல உலக சாதனைகளை உருவாக்கியுள்ளார்.
புறாவுக்கு தன் தசை தந்த சிபிசோழன், மகனை நீதிக்காக கொன்ற மனுநீதி, கல்லணை கட்டிய கரிகாலன் போன்று, சோழர் பரம்பரைக்கு பெருமை சேர்த்தவன், ராஜராஜன் எனும் செய்தி, மரபுக்கு மகுடம் சூட்டுகிறது.
ஒரே பகலில், 18 காடுகள் கடந்து, காந்தளூர் சேர மன்னனை அழித்ததை, திருக்கோவிலுார் கல்வெட்டு சொல்கிறது.
இலங்கையின் ஈழவேந்தன் மகிந்தனை வென்று, அங்கு ராஜராஜசுவரம் கற்றளி எழுப்பினான்.
வீரம், பக்தி, கலை ஆகிய மூன்று நிலைகளிலும், தன் வாழ்நாளில் வெற்றி தடயங்களை உருவாக்கிய மாமன்னரின் முடிவும் மகத்தான ஆய்வுக்கு உட்பட்டதாக உள்ளது. கி.பி., 1014ல் உடையாளூரில் மாமன்னரின் பள்ளிப்படை (சமாதி) இருப்பதை, கல்வெட்டு அறிஞர் சேதுராமன் கண்டறிந்துள்ளார்.
சில நல்ல நயமுள்ள இடங்கள், படிப்பவருக்கு புதையல் கிடைப்பது போல. இங்கே ஒரு இடம். பொய், பித்தலாட்டம், அநியாயம், துரோகம், நயவஞ்சகம், இத்தனையும் நிறைந்த சோழனுக்கு பெயர் உத்தம சோழன் (பக்.,72).
அரண்மனை நீராட்டு அறை, மடப்பள்ளியிலும் பெரும்பாலான பணிகளுக்கு பெண்களே இருந்தனர். ‘பெண்டாட்டிகள்’ என்று இவர்கள் அழைக்கப்பட்டனர்.
கொடுத்த கடனை வசூலிக்க, கைக்கோளர் படை, வில்லிகள் படை நியமிக்கப்பட்டன.
ராஜராஜனின் மிகப்பெரிய கப்பல் படை, இலங்கை, மாலத்தீவு பகுதியில், 700 கி.மீ., பரவி இருந்தது.
தஞ்சை கோவிலில், ஆடல் மகளிர், 407 பேர் இருந்தனர்.
நெஞ்சை அள்ளும் தஞ்சை கோவிலாக, நுாலைப் படித்ததும், ராஜராஜன் வரலாறு நம்மிடம் பேசுகிறது! வரலாற்று ஆவண நுால்!
– முனைவர் மா.கி.ரமணன்