இன்றைய இளைஞர்களுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும், திருத்தணி, சென்னை ஆகிய நகரங்கள் தமிழகத்துடன் இணைந்த வரலாறு தெரிந்திருக்காது என்று கூறலாம்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சி., தமிழாசிரியர் மங்கலங்கிழார், தளபதி கே.விநாயகம், என்.ஏ.ரஷிது, கோல்டன் ந.சுப்பிரமணியன் உள்ளிட்ட பல போராட்ட வீரர்கள் குறித்து, இந்நுால் விரிவான செய்திகளைக் கூறுகிறது.
வெள்ளையர் ஆதிக்கத்தில் வேங்கடம், சித்துார் மாவட்டங்கள் உருவான வரலாறு, வடக்கெல்லைப் போராட்ட வரலாறு, சித்துார் போராட்டத்தில் தமிழக கம்யூனிஸ்டுகள் நடுநிலையில் இல்லை என்றும், 1985ல், எல்லைக் கமிஷன் தினம் கொண்டாடப்பட்டதும் கூறப்பட்டு இருக்கின்றன.
எல்லைப் போராட்டத்தில் தமிழரசு கழகம் ஆற்றலுடன் செயல்பட்டதும், அதனால் தமிழகம் பெற்ற கிராமங்களும், டிசம்பர் 15, 1952ல் சென்னை ஆந்திரர்களுக்கு வேண்டும் என்று பொட்டிஸ்ரீராமுலு பட்டினிப் போராட்டம் நடத்தி உயிர் விட்டதும், சென்னை மாகாண சட்டசபையில் வடக்கெல்லைகள் குறித்து விவாதம் வந்த போது, தமிழக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், பி.இராமமூர்த்தியும், ப.ஜீவானந்தமும் சபைக்கு வராமல் இருந்ததும் கண்டு பலர் வியக்கலாம்.
– பேரா., டாக்டர் கலியன் சம்பத்து