மலரைத் திறந்ததும் சிருங்கேரி ஜகத்குரு பாரதி தீர்த்த மகா சுவாமிகள் அருளுரையைக் காணலாம். ‘காலணி அணிந்தவன் கூழாங்கல், முள் முதலியவற்றின் மீது கஷ்டமில்லாமல், சுகமாக நடப்பதைப் போல, எப்பாதும் மன நிறைவுடன் இருப்பவனுக்கு எல்லாவிடங்களும் மகிழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும்’ என்ற அவர் அருளுரை நிறைவு தரும்.
அந்தமான் தீவுகளில் உள்ள, ‘காலா பாணி’ முந்தைய காலத்தில் பயங்கர சிறைச்சாலை; இன்று சுற்றுலாத் தலம். கடற்கரையும் சுத்தமாக இருக்கிறது.
மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, ‘சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை‘ என்ற பெருமை கொண்டது. அதை வண்ண ஓவியங்களாக சித்ரேலகா அமைத்திருப்பது அழகாக உள்ளது. இலங்கையில் உள்ள நல்லுார் கந்தசாமி கோவில், 1,600 ஆண்டுகள் பழமை பெற்றது.
இது தற்போது பிரமாண்ட கோபுரத்துடன் மிளிர்கிறது என்ற ஆன்மிக கட்டுரையும் உள்ளது.
மாமல்லபுரம் செல்லும் பலரும் எண்ணிக்கையில் அடங்கா சிற்பங்களை பார்த்திருக்கலாம், அதில் அமைந்த ஐந்து தேர்கள் சிற்பம் உட்பட அனைத்தையும் வண்ணப்படங்களுடன், உரிய விளக்கங்களுடன் இருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. அட்டையில் அன்னபூரணியின் அழகு மிகு திருவுருவம், பிரபல எழுத்தாளர்கள் கட்டுரைகளும் மலருக்கு அழகு சேர்க்கின்றன.