தமிழகத்தின் தொன்மைச் சமயம் சைவமாகும். இச்சமயம் வளர்த்த பெரியோர் பற்பலராவர்; அவருள் தாயுமானவர், பட்டினத்தார், குமரகுருபரர், சிவஞான சுவாமிகள் ஆகிய நால்வர் பற்றியும், சைவ சித்தாந்த விளக்கத்தையும், சைவ சிந்தாந்த சந்தனாச்சிரியர்கள் பற்றியும் இந்நுால் விரிவாகச் சொல்லியுள்ளது.
நுாலைப் படைத்தவர், தமிழகத்தில் தமிழ் வளர்த்த சான்றோரில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றவர்.
சட்டம் படித்த பலர் தமிழறிஞராகவும் விளங்கினர். அவருள் எம்.எல்., பிள்ளை எனக் குறிக்கப்பட்ட, கா.சுப்பிரமணிய பிள்ளை முதன்மையாளர். அவர் காலத்து, பி.எல்., சட்டப் படிப்பிற்கு மேலான, எம்.எல்., படித்தவர் இவர் ஒருவரே.
ஆதலின், எம்.எல்., பிள்ளை எனச் சுருக்கமாகவும் விளக்கமுறவும் தமிழர் சொல்லி மகிழ்ந்தனர். இந்நுாலில் காணும் சான்றோர் நால்வர் பற்றியும், பிற இரண்டும் தனித்தனி நுாலாக வந்தவை.
மெய்கண்ட தேவரின் சிவஞானபோதம், சைவர்களுக்கு மந்திர நுாலாக போற்றப்படுகிறது. அந்நுால் வட மொழியில் நந்தி தேவர் படைத்ததின் தழுவல் என ஒருசாரார் பரப்புவதைக் கடுமையாகச் சாடி, தமிழர் தம் மறைநுால் சிவஞானபோதம் என நிலைநாட்டியுள்ளார் ஆசிரியர்.
திராவிட மாபாடியப் பேராசிரியர் என, மாதவச்சிவஞான முனிவர் போற்றப்பட்டுள்ளார்.
பெருஞ்செல்வத்தில் திகழ்ந்தோர் பெருந்துறவு கடைப்பிடித்தமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாவார் பட்டினத்தடிகள்.
வடநுால் கடலும், தென்றமிழ் கடலும் நிலைகண்டுணர்ந்து சித்தாந்த மாபாடியமும், இலக்கணப் பேருரையும் படைத்தளித்தவர் சிவஞான சுவாமிகளாவார்.
கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கியங்கள் பல படைத்து, பன்மொழிப் புலமை பெற்று மொகலாய மன்னரும் வணங்கத் தகுதி பெற்று, காசியிலே திருமடம் அமைத்த பெருமை பெற்றவர் குமரகுருபரர். சைவப்பெருமக்கள் அறுவர் வரலாறும் தமிழுக்குச் செய்த பங்களிப்பும், சைவநெறி வளர்த்த பாங்கும் இனிதாக இந்நுாலுள் விளக்கப்பட்டுள்ளன.
தமிழர் படித்து வீறுகொள்ளவும், விம்மிதம் பெறவும் இந்நுால் பெருந்துணையாகும். புத்தகத்தின் கனம், அழகான கட்டமைப்பும், பிழையற்ற அச்சு நேர்த்தியும் காவ்யாவின் பெருமைக்குச் சான்றாகும்.
– கவிக்கோ ஞானச்செல்வன்