இந்திய இறையாண்மையைக் காக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய அரசியல் சாசன வரைவுக்குழுவில் பங்கேற்றவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், எஸ்.கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர், இன்று மறக்கப்பட்ட பெயர்கள்.
ஆனால் நல்லவேளையாக இம்மாபெரும் சாசனத்தை, சிறந்த ஆவணமாக்கிய டாக்டர் அம்பேத்கர் இன்று வரை போற்றப்படுவது நல்ல அம்சம்.
நம் அரசியல் சாசனம் காட்டிய வழிகளை சரியாக உணர்ந்து செயல்படும் அரசியல் ஆட்சியாளர்கள் கிடைத்தால், அதனால் இந்தியா உயரும். ஏதோ, 1949ம் ஆண்டு நவ., 26ம் தேதி உருவானது என்பதை விட நம், 5,000 ஆண்டு இந்திய பாரம்பரிய விழுமியங்களை இச்சாசனம் கொண்டது என்பதை இந்த நுால் உணர்த்துகிறது.
வரைவுக்குழு பணி முடிந்து, 1950ம் ஆண்டு ஜன., 26ல் அரசியல் சாசனம் உருப்பெற்றது. அந்தக் குழுவில் பங்கேற்ற பண்டிட் தக்கூர் பார்க்கவா என்ற கிழக்கு பஞ்சாப் தலைவர்.
‘அரசியல் சாசனத்தின் பணி தயாரிப்புடன் முடியவில்லை. உண்மையான சுதந்திரமும், மகிழ்ச்சியும், செல்வச் செழிப்பும் மக்கள் அடைய, அரசியல் சாசனத்தை செயல்படுத்த வேண்டியதுள்ளது’ என்ற கருத்து இன்றைக்கும் பொருந்தும்.
எளிதாக சில விஷயங்களை இந்த நுால் தெளிவாக்குவதால், அரசியல் சாசனம் பற்றிய புரிந்துணர்வு அதிகரிக்க உதவிடும்.