இந்தியாவில் மக்கள் என்று தோன்றினர் என்பதையும், அவர்களிடம் இறைவணக்கம் எப்போது தோன்றியது என்பதையும் அறிய இயலாது. தற்போது இந்தியர்களில் பெரும்பாலோரால் பின்பற்றப்படும் சமயத்திற்கு இந்து சமயம் எனப் பெயர் கூறப்பட்டாலும் இந்தப் பெயருக்கு அப்பாற்பட்டது நம் வழிபாட்டு முறை.
இந்தியாவில் தோன்றிய இந்த வழிபாட்டு முறைக்கு மொழி, இனம் என்னும் பேதங்கள் கிடையாது.
மக்கள் தங்கள் வசதிக்கேற்ற மொழியில், தங்கள் மரபில், தோன்றிய சடங்குகளின்படி வழிபட்டு வந்தனர். இவ்வாறு வழிபட்டு வந்த முறையில் ஆயிரக்கணக்கான வழிபாட்டு முறைகள் தோன்றியதைப் பார்த்ததும், ஆதி சங்கரர் இந்த வழிபாட்டு முறை அத்தனையையும் ஆறு வழிபாட்டு முறைக்கு உட்படுத்தினார்.
கணபதியை முழுமுதல் கடவுளாக வழிபடும் முறைக்குக் காணாபத்தியம் என்றும், முருகனை முழுமுதல் கடவுளாக வழிபடும் முறைக்குக் கௌமாரம் என்றும், சிவனை முழுமுதல் கடவுளாக வழிபடும் முறைக்குச் சைவம் என்றும், திருமாலை முழுமுதல் கடவுளாக வழிபடும் முறைக்கு வைணவம் என்றும், சக்தியை முழுமுதல் கடவுளாக வழிபடும் முறைக்கு சாக்தம் என்றும், சூரியனை முழுமுதல் கடவுளாக வழிபடும் முறைக்கு சௌரம் என்றும் பெயர் வழங்கினார்.
இந்த ஆறுசமயப் பிரிவுகளும் தமிழகத்தில் சைவம் வைணவம் என்னும் இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிட்ட தன்மையைக் காணமுடிகிறது. காணாபத்தியம், கௌமாரம், சௌரம், சாக்தம் என்னும் நான்கும் சைவம் என்னும் ஒரே வழிபாட்டு முறைக்குள் அடங்கிவிட்டன. வைணவம் மட்டும் தனித்த வழிபாட்டு முறையாக நிற்கிறது. இந்த ஆறு சமயப் பிரிவுகளையும் இந்தச் சமயங்களுக்கு உட்பட்ட திருத்தலங்களையும் மிகவும் விரிவாக கே.எஸ்.சுப்பராமன் இந்த நுாலில் விளக்கியுள்ளார். எளிதில் கவரும் தன்மையுடன் விளங்குகிறது.