கிளியும் பெண்மையும் இயைந்த தமிழ் அழகு காட்டும் அட்டைப்பட கட்டுரை,
‘பரிமள யாமளைப் பைங்கிளியே’ என்ற கட்டுரை. கிளியின் தனித்துவத்தை காட்டுகிறது.
‘பூங்கிளி’ என்பது பராசக்தியைக் குறிக்கும் சொல் என்ற சிறப்பும் காட்டப்பட்டிருக்கிறது அட்டை வண்ணப்படம் வேதா தயாரிப்பில் அருமை.
காசி விஸ்வநாதர் கோவிலை அழித்த அவுரங்கசீப் செயலை மாற்றி, அங்கே நாம் வணங்கும் விஸ்வநாதரை மீண்டும் திருப்பணியால் அழகுபடுத்திய அகல்பாய் அரசி, பெண்களில் சிறந்த பெருமாட்டி.
பெரும் கவித்துவ திறமை வாய்ந்த விஜயநகரப் பேரரசி கங்காதேவி, மதுரை மீனாட்சி கோவிலை அடைத்த, சுல்தான் குர்பத் ஹசனை வென்று, ‘அங்கே அன்னையைக் கண்ட காட்சி’யை நிலைக்க வைத்த பெண் அரசி ஆகியோர் வரலாறு, புதிய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.
இப்படி மங்கையர்க்கரசிகள் வரலாறு, வண்ணப் படங்கள் சரித்திரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும்.
பல டெலிவிஷன்களில் செய்தி வாசிக்கும் பெண்மணிகள் சிறப்பு பற்றிய கட்டுரையில், செய்திகளை உள்வாங்கி தெரிவிக்கும் ஆற்றல் அவர்கள் பன்முகப் பண்பினர் என்பதை விளக்கும் தகவலும் சிறப்பானது.
கோவில்களில் மூலவர் அலங்காரம், உற்சவர் அலங்காரம் என்பது நிச்சயமாக மனங்களுக்கு மகிழ்ச்சி தரும் படைப்பாகும். கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்காலம் பற்றி, மூத்த தலைவர் நல்லகண்ணு, ‘போராடிக்கிட்டே இருப்போம்’ என்ற உண்மை வரிகள் அர்த்தமுள்ளது.
இந்திரா பார்த்தசாரதி, சுப்ர.பாலன் உட்பட பல சிறந்த எழுத்தாளர் கட்டுரைகள், சீதாரவி, மாலன் உட்பட ஏழு பேர் சிறுகதை படைப்புகள், அத்துடன் நகைச்சுவை ததும்பும் படைப்புகள், அழகான ஒளிப்படங்கள், 10க்கும் மேற்பட்ட கதைகள் ஆகியவை, மலரை மிகவும் சிறப்பாக்கி உள்ளன.