தீபாவளி என்றதுமே, புது டிரஸ், பட்சணம், பட்டாசு வரிசையில், தீபாவளி மலரும் நிச்சயம் இடம்பெறும் என்பதை, விகடன் தாத்தா இவை அனைத்தையும் தட்டில் ஏந்தி, இதழ் ஆரம்பித்திலேயே சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த வண்ணப்படத்துடன் ஆரம்பிக்கிறது, மலரின் சிறப்பு அணிவகுப்புகள்.
மலரின் அட்டை படம், பிள்ளையாருக்கு பூஜை செய்வது போன்ற காட்சி, ஓவியரின் கை வண்ணத்தில் மிளிர்கிறது.
ஆன்மிக கட்டுரைகளில், இந்த ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வான, அத்தி வரதர் பற்றிய தகவல்கள் அருமை. அதேபோல், பழங்கால கோவில்களில், தென்காசி விசுவநாதர் கோவிலின் அருமை பெருமைகள், அழகிய புகைப்படங்களுடன் வெளியாகியுள்ளன.
பயணக் கட்டுரை வரிசையில், இமயமலையின் லடாக் பகுதிக்கு பைக்கில் சென்ற ரஞ்சித் ரூஸோவின் அனுபவங்கள், படு, ‘த்ரில்!’
மலை பிரதேசமான, மணாலியில் ஆரம்பிக்கிறது பயணம். பியாஸ் நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி ரோத்தங் பாஸ் எனும் இடத்தில் பனியில் விளையாடி சென்றதை, கண் முன் கொண்டு வருகிறார்.
கெலாங்கு என்றொரு இடம். அந்த இடத்தை கடந்தால் தான், லடாக் செல்லும் மலைப்பாதையை தொட முடியும் கட்டுரையாசிரியர் எழுதுகிறார்.
கெலாங்கிலிருந்து கிளம்பிய முதல் வளைவிலேயே, முழங்கை அளவுக்கு தண்ணீரை கடக்க வேண்டியிருந்தது. நுாற்றுக்கும் அதிகமான செம்மறி ஆடுகள் சாலையை முற்றுகையிட, எதிரில் ஒரு லாரி... இதன் இரண்டுக்கும் இடையில் ஓடும் தண்ணீர். தண்ணீருக்கு அடியில் கரடுமுரடான கற்கள். பைக்கை தள்ளிக் கொண்டு செல்ல முடியாது. சாலை ஓரத்தில் எந்த தடுப்பும் இல்லை. சிறிது தடுமாறினாலும், அதளபாதாளம் தான்...’
படிக்கும் போதே ஆபத்து புரிந்து, உடல் நடுங்குகிறது. இறுதியாக, லடாக்கை அடைந்ததும், நமக்கு நிம்மதி ஏற்படுகிறது.
கீழடி அகழ்வராய்ச்சி பற்றி ஒரு கட்டுரை. அதல் உள்ள தகவல்களை படிக்கும் போது, தமிழர்களின் பெருமையை உணர முடிகிறது. சினிமா, கலை, சிறுதைகள், கவிதை, தமாஷ் என்று இதழ், பல்சுவை படைப்புகளால் கட்டிப்போடுகிறது.