அட்டையில் ராதே கிருஷ்ணன் வண்ணப்படம், ராமராஜ்யம் என்ற இருளற்ற ஒளி வாழ்க்கை தேவை என்ற முன்னுரையுடன் இத்தீபாவளி மலர் துவங்குகிறது. வாதாபி கணபதி வந்த வரலாறு, மாமல்லபுரம் பெற்ற பெருமை ஆகியவை வரலாற்றுப் பதிவுகளை தாங்கியவை.
ஜஸ்டிஸ்அருணாசலம், பகவான் சுரத்குமார் குறித்து தெரிவித்த உணர்வு பூர்வ கருத்துகள், ஸ்ரீலலிதாம்பிகை அருள் தரும் திருமீயச்சூர், என்பது தனிச்சிறப்பு மிக்க தலம் என்பதை ஸ்ரீதரன் எழுதிய ஆன்மிக கட்டுரை விளக்கும்.
கோவையில், சிங்காநல்லுார் உலகளந்த பெருமாள் கோவில், சிறப்பு, ஒரிசா உட்பட பல மாநிலங்களில் உள்ள கோவில்கள் என்ற பல கட்டுரைகள் இந்த மலரை கோவில் மலராக்கியிருக்கிறது.
ராமனுஜர் போற்றிய திருக்கோஷ்டியூர் அஷ்டாங்க விமானம் 96 அடி உயரம் கொண்டது என்பது உட்பட தமிழகத்தின் பலகோவில்கள் பெருமை கூறும் கட்டுரை. கடவுளை வணங்குவோர் தமிழ்க்கலாசாரத்தை உணரும் வாய்ப்பைத்தரும். நாமக்கல் கவிஞர் அரசியல் வாழ்க்கை என்பது இன்று பலரும் மறந்த மாபெரும் மனிதரை நினைவு படுத்த உதவும்.
அஹோபில மடத்தின் சிறப்பு ஆண்டாண்டாக இம்மலரில் இடம்பெறும் என்றாலும், இத்தடவை சற்று புதுமையான தகவல்கள் உள்ளன. கறுப்பு வெள்ளைப்பட கட்டுரைகள், சிறப்பு வண்ணப்படங்கள் நுாலுக்கு அழகு தருகின்றன.