உலகம் போற்றும் ஒப்பற்ற காப்பியம் ராமாயணத்திற்கு, பல அறிஞர் பெருமக்கள் விரிவுரை, விளக்கவுரை எழுதியுள்ளனர். அவர்களில், பாரம்பரியம் மாறாமல், உரைநடை வடிவில், விளக்கவுரை எழுதியுள்ளார், புலவர் சி.திருநாவுக்கரசர். ராமாயண பாத்திரங்களை தன் எழுத்தால் செதுக்கியுள்ள ஆசிரியரின் உரைக்கு பாடல்களும் கைகோர்க்கின்றன.
மொத்தம், 512 பக்கங்களை கொண்டுள்ள இந்த நுாலில், ஆங்காங்கே இடம்பெற்றுள்ள முழு பக்க படங்கள், ராமாயண காப்பிய கதாநாயகர்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
காப்பியத்தின் உண்மைத் தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக எழுதியுள்ள ஆசிரியர், தன் உரைநடைக்கு ஆதாரமாக, காப்பியத்தின் வரிகளையும், மேற்கோளாக திருக்குறளையும் பல இடங்களில் காட்டியுள்ளார்.
அழகிய வண்ணத்தில், ராமர் பட்டாபிஷேக காட்சிகளை விளக்கும் படத்துடன் முகப்பு அட்டை விளங்குகிறது. தடிமனான அட்டைகளை கொண்டுள்ளதால், நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டாலும், நீடித்திருக்கும்.
ராமாயணம் என்றாலே, பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் மற்றும் யுத்த காண்டம் என, ஆறு காண்டங்களைத் தான் கொண்டிருக்கும் என்பது அனைவரும் அறிந்தது. அதனுடன் உத்தர காண்டமும் இந்த நுாலில் இடம்பெற்றுள்ளது இதன் சிறப்பை விளக்குவதுடன், முழுமையான ராமாயணம் படித்த உணர்வை தருகிறது.
உத்தர காண்டம் என்பது, ராமாயண முக்கிய பாத்திரங்களை, பின்னணிகளை அலசும் பகுதியாகும்.
வழக்கமான ராமாயண நுால்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், சற்று பழங்கால பயன்பாட்டில் இருந்தவையாக இருக்கும் என்பதால், படிக்கும் போது வேறு மாதிரியான உணர்வைத் தரும். ஆனால், இந்த புத்தகத்தில் எடுத்தாளப்பட்டுள்ள வார்த்தைகள், தற்போதைய காலகட்டத்தில் பயன்பாட்டில் உள்ள எளிய தமிழ் எழுத்துகள் என்பது பாராட்டத்தக்கது.
அதுபோல, தமிழுடன் கலந்து விட்ட வட மொழி எழுத்துகள் பல இருந்த போதிலும், இந்த நுாலில் அந்த எழுத்துகள் பக்குவமாக நீக்கப்பட்டு, எளிதாக படிக்க வசதியாக, சுத்த தமிழ் வார்த்தைகளே இடம்பெற்றுள்ளன.
உதாரணமாக, வசிட்டர், விசுவாமித்திரர், இலக்குவன் போன்ற வார்த்தைகள், பாமரரும் படிக்க எளிதாக உள்ளது. இந்நுால், 30 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்ற உணர்வே தெரியாத அளவுக்கு அழகிய முறையில், அருமையாக உள்ளது. அனைவரும் வாங்கி, படித்து பாதுகாக்க வேண்டிய காப்பிய நுால் இது!