படிப்பவரது உள்ளத்தை உருக்கி ஒளி கூட்டும் மாணிக்கவாசகப் பெருமானின் திருவாகம். அதன் பதிகங்களைக் கூறி, அதற்கு எளிய விளக்க உரையுடன் இந்நுால் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல்கள் யாவும் இறைவனது புகழை, பக்தியுணர்வை, தங்களது சிறுமையை, இறைவன் தங்களிடம் காட்டிய கருணையைக் கூறுவதைப் பார்க்கலாம், இந்நுால் எழுதிய மூவரும் பக்தி அனுபவத்தில் தேர்ந்தவர்கள் என்றாலும், அந்த அனுபவம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை.
திருவாசகம் இதிலிருந்து வேறுபட்டு, தாம் பெற்ற பக்தி அனுபவத்தை நமக்குக் கூறுகிறது. இத்தகைய அரிய பாடல்களின் பொருளை உணர்ந்து மக்கள் பயன் பெறுவதற்கு இந்நுால் உதவியாக இருக்கும்.
திருவாசகப் பாடல்களின் இனிமையோடு, அவற்றின் பொருளையும் முழுமையாக உணரும் போது, அங்கு நுாலின் பயன் முழுமையடைகிறது. சான்றாக, திருப்பொற்சுண்ணம் எனும் ஒன்பதாவது பதிக முடிவில், அதன் விளக்கம் இவ்வாறு துவங்குகிறது.
‘தலைவனை மங்கல நீராட்டுவார். முதலில் அவனது மேனியில் நெய்யேற்றிய பின்பு, நறுமணப் பொடியைப் பூசி நீராட்டுவர். அந்நறுமணப் பொடியே இங்குப் பொற்சுண்ணம் எனப்படுகிறது. மகளிர் பலர் கூடிப் பொற்சுண்ணம் இடிக்கும்போது பாடும் பாட்டாக இதை அருளிச் செய்தார் அடிகள்.’ இந்த விளக்கம் அப்பதிகப் பாடலுக்குச் செல்லுமுன் அதன் சூழலையும், முழு விளக்கத்தையும் அறியச் செய்கிறது. பக்தியின் அனுபவத்தை உணர, வாசிப்போம் திருவாசகத்தேனை.
– முனைவர் கி.துர்காதேவி